அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கை அளித்த தங்கம், வெள்ளி நகைகள் பத்திரமாக உள்ளன
அயோத்தி: “அயோத்தி ராமர் கோவிலுக்குப் பக்தர்கள் காணிக்கையாக அளித்த விலை உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அனைத்தும் முற்றிலும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உள்ளன,” என, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோவில் காணிக்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து மாநில அரசு, சிறப்பு விசாரணை குழு அமைத்தது. இதற்கிடையே அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்ட நபர்கள் உண்டியல் காணிக்கையை திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலர் சம்பத் ராய், உறுப்பினர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற இந்திய வனப்பணி அதிகாரியான கிருஷ்ண மோகன் என்பவர் இடைக்காலப் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அறக்கட்டளை நிர்வாகிகள் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்பின் அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி கூறுகையில், “அயோத்தி ராமர் கோவிலின் நன்கொடைப் பதிவேட்டுப் பட்டியலில் உள்ள 30 கிலோ எடை தங்கம் மற்றும் 1,518 கிலோ எடை வெள்ளிப் பொருட்களும் என மொத்தம் உள்ள 2,926 விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கான பதிவுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளைப் பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம்,” என்றார்.