திருப்புத்தூர் அருகே 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் புதுவளவில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கிடைத்துள்ளது.
காரையூர் புதுவளவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரமேஷ் என்பவர் கிராமத்திலுள்ள வண்ணிக் கண்மாய் கரையில் ஒரு கல்வெட்டு கிடப்பதாக சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவுநர் புலவர் கா.காளிராசா , செ யலர் நரசிம்மன், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி, வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் வேலாயுதராஜா ஆகியோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து இருவரும் அப்பகுதியில் களஆய்வு செய்தனர். அதில் இரண்டடி நீளமுள்ள அக்கல்வெட்டை ஆய்வு செய்ததில் ஏழு வரிகள் எழுதப்பட்டிருந்தன. வரிகள் முடியும் இடத்தில் ஒரு பூரண கும்பமும், அதன் இரு பக்கமும் குத்து விளக்குகளும் செதுக்கப்பட்டிருந்தது. அதன் எழுத்தமைதியை கொண்டு பொது ஆண்டு 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டாக கருதப்படுகிறது. மேலும் தெரிய வந்ததாவது: கல்வெட்டில், 1. ஸ்வஸ்திஸ்ரீ வண், 2. ணக்கநல், 3. லூர் மே வி, 4. க் குளம் சியர், 5. வே த நெ றி கா, 6. ட்டினான் சிய, 7. ர் இரக் ஷை, ஆகிய 7 வரிகள் எழுதப்பட்டுள்ளது. அதன் அர்த்தமாக , வண்ணக்க நல்லூர் என்ற ஊரில் உள்ள குளத்தின் பகுதியை அடை ந்து வாழ்ந்த சீயர் (வைணவ ஆச்சாரியார்), மக்களுக்கு நல்வாழ்வுக்கான வேத நெறியைக் காட்டி, அவர்களைப் பாதுகாத்து (ரக்ஷை செய்து) அருளினார் எனப் பொருள் கொள்ளலாம். முன்னர் காரையூரில் அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோரது கல்வெட்டுகளில் வண்ணக்க நல்லூர் பெயர் கண்டறியப்பட்டுள்ளது. இக்கண்மாய் வண்ணிக்கண்மாய் என அழைக்கப்படுகிறது. கண்மாய் கரையில் உள்ள அய்யனார் வண்ணி குன்னி அய்யனார் எனப்படுகிறார். தற்போது கிடைத்துள்ள கல்வெட்டும் அதை உறுதி செய்துள்ளது. இதனால் 13ம் நூற்றாண்டில் இப்பகுதி வண்ணக்கநல்லூர் என்று அழைக்கப்பட்டதும், வைணவம் கடைப்பிடிக்கப்பட்ட பகுதியாகவும் இருந்துள்ளது.