கோவில்களில் போட்டோ, வீடியோ எடுக்க தடை; வரிசை இன்றி உள்ளே செல்லும் பிரபலங்கள், அரசியல்வாதி, போலீசுக்கு கட்டுப்பாடு எப்போது?
சென்னை: கோவில்களில் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது என சினிமா பிரபலங்கள், விஐபிகளுக்கு ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதே போல் வரிசை இன்றி தொண்டர்கள், குடும்ப சகிதமாக நேரடியாக செல்லும் அரசியல்வாதிகள், போலீசாருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோவில் வளாகத்திற்குள் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதியும் வழங்கக்கூடாது; இந்த நடைமுறையை அனைத்து கோயில்களிலும் உடனடியாக பின்பற்ற ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் வினய் உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை: * திரைத்துறை முதலான கலைத்துறை பிரபலங்கள், முக்கிய நபர்கள் திருக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவதாக தெரியவந்தால் குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாக அல்லது தெரிய வந்த உடன் அவர்கள் வரவிருக்கும் திருக்கோவில், வருகை நேரம், அவர்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரங்களையும் ஆணையர் அலுவலகத்திற்கு கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும்.
* அத்தகைய வருகையின்போது, திருக்கோவில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுப்பதற்கும், காணொளி பதிவு செய்வதற்கும் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது.
* பிரபலங்கள் அல்லது முக்கிய பிரமுகர்களின் வருகையின்போது, பக்தர்களின் தரிசனத்திற்கு எந்தவித இடையூறு ஏற்படாத வகையில், அவர்களின் நுழைவு மற்றும் இயக்கம் உரிய முறையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். திருக்கோவிலின் புனிதத் தன்மையும், மரபு சார்ந்த ஒழுங்கும் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது.
* முன்கூட்டியே அனுமதி வழங்கப்பட்டவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக அவசியமான அலுவலர்கள் பணியாளர்கள் மட்டுமே பிரபலங்கள் அல்லது முக்கிய பிரமுகர்களுடன் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட அறிவுறுத்தல்கள் அனைத்து திருக்கோவில்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை அனைத்துச் செயல் அலுவலர்களும் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களும் எவ்வித விதிவிலக்கும் இன்றி, மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் வினய் கூறியுள்ளார்.
அரசியல்வாதி, போலீசுக்கு எப்போது? : ஒவ்வொரு முறையும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கோவிலுக்கு வரும்போது அவர்களுடன் 10 முதல் 20 பேரை அழைத்து வருகின்றனர். வரிசையிலும் காத்திருப்பதில்லை, டிக்கெட் எடுக்காமல் கூட்டமாக கோவிலுக்குள் செல்கின்றனர்.
தடுக்க வேண்டும்: இத்தகைய செயல், வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்துகிறது. டிக்கெட் எடுக்காத அரசியல் பிரமுகர்களை கோவில் அதிகாரிகள் கண்டிப்புடன் தடுத்து நிறுத்த வேண்டும்.
தேவை டிஜிபி உத்தரவு: அரசியல்வாதிகளைப் போலவே போலீசாரும் டிக்கெட் இல்லாமல் ஆட்களை கோவிலுக்குள் அழைத்துச் செல்கின்றனர். இதை தடுக்க, டிஜிபி, போலீசாருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
பக்தர்கள் வேதனை: கோவில்களில், விசேஷ காலங்களிலும், சுவாமி அலங்காரம், ஊர்வலத்தின் போதும் மட்டுமே நாதஸ்வரம், மேளம் வாத்தியம் இசைக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. ஆனால் விஜய் ஆட்சிக்கு வந்த நிலையில் பல கோவில்களில் புதிய நடைமுறை ஒன்று துவங்கியுள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட விஐபிகள் வருகையின் போது அவர்களுக்கு முன்னதாக நாதஸ்வரம், மேளம் இசைத்தபடி செல்கின்றனர். இது தவறான நடைமுறை. கோவில்களில் வீற்றிருக்கும் சுவாமியை அவமதிக்கும் செயல் என்று வேதனைப்படுகின்றனர் பக்தர்கள்.இதற்கு முடிவு கட்ட அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்கின்றனர் பக்தர்கள்.