மகாவிஷ்ணு கற்சிலை பாலாற்றில் கண்டெடுப்பு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே பாலாற்றில், மகாவிஷ்ணு கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா, அவரக்கரை பாலாற்றில் நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் மாடு மேய்த்து சென்ற போது, தலைப்பகுதி சிதிலமடைந்த நிலையில், மகாவிஷ்ணு கற்சிலை கிடந்துள்ளது. இதைப்பார்த்த மக்கள் சிலையை மீட்டு, அதற்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். வாலாஜா தாசில்தார் நடராஜன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், சிலையை மீட்டு, ஆற்காடு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வேலுார் அரசு அருங்காட்சியகத்தில் சிலையை ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. அதிகாரிகள் கூறுகையில், ‘சிவன் கோவிலின் பின்புறம் வைக்கப்படும் மகாவிஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், பாலாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிலை அடித்து வரப்பட்டிருக்கலாம். சிலையின் காலம் குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்’ என்றனர்.