உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவன் நாமத்தை நாம் உச்சரித்தால் துன்பம் நீங்கும்

இறைவன் நாமத்தை நாம் உச்சரித்தால் துன்பம் நீங்கும்

சென்னை: மயிலை மகா பெரியவா -அனுஷம் டிரஸ்ட் சார்பில், மயிலாப்பூரில் உள்ள காஞ்சி மகா பெரியவா கோவிலில், ஆடி மாத சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, ‘வில்லி பாரதம்’ தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இதில் நேற்று, ஆன்மிக பேச்சாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:

சூதாட்டத்தில், தன் ராஜ்யம் மற்றும் அனைத்தையும் தர்மன் இழந்தான். சபையில் துச்சாதனன் திரவுபதியின் சேலையைப் பிடித்து இழுத்தபோது, அங்கிருந்த பெரியவர்கள் யாரும் அவளைக் காப்பாற்றவில்லை.

திரவுபதி, ‘கோவிந்தா, கோவிந்தா’ என கதறி அழைத்து, பகவானைச் சரணடைந்தாள்; அவளது கூக்குரலைக் கேட்டு பகவான் அவளுக்கு புடவையை வழங்கி மானத்தை காப்பாற்றினார்.

மஹாபாரதத்தில், அர்ச்சுனனின் பேரனான பரீட்சித்துவின் கருவை காப்பாற்ற, பகவான் கிருஷ்ணர் அருள்புரிந்தார்.

அப்போது, திரவுபதி ‘கோவிந்தா’ என அழைத்தபோது, உடனே சென்று உதவியதாக பகவான் குறிப்பிடுகிறார். இந்த காலத்து இளைஞர்கள், இதை தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் முன்னோர்கள், கிராமங்களில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்கள், பஜனை மடங்களுக்கு தொண்டு செய்து, இறைவனின் திருநாமத்தை சொல்லிச் சேர்த்த புண்ணியத்தால்தான், நாம் இன்று சவுரியமாக இருக்கிறோம்.

எனவே நாம், இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டிருந்தால் சகல வளங்களோடு, எப்போதும் நலமுடன் வாழலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !