காஞ்சி வரதர் சிலை சீரமைப்பு தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சேதமடைந்த உற்சவர் வரதர் சிலை சீரமைப்பு பணி நிறைவு பெற்றதையடுத்து, நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த மாதம் 3ம் தேதி உற்சவருக்கு அபிஷேகம் நடந்தபோது, சிலையில் கால் பாதம், கழுத்து, காது உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.
இதனால், சேதமான சிலையை சீரமைப்பு செய்ய ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 6, 7 ஆகிய இரண்டு நாட்கள், வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் சிலைகள் சீரமைப்பு திருப்பணி நடந்ததால், மூலவர் மற்றும் பல்லி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
நேற்று அதிகாலை 2:00 மணிக்கு வரதராஜ பெருமாள் உற்சவர் சிலை சீரமைப்பு பணி நிறைவு பெற்றது. அதையடுத்து, வேதமந்திரங்களுடன், சீரமைப்பு பணி செய்யப்பட்ட உற்சவர் சிலைகளுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் வரதராஜ பெருமாளை, பக்தர்கள் தரிசிக்க, நேற்று காலை 9:00 மணிக்கு அனுமதிக்கப்பட்டனர்.