ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் இன்று ஐந்து கருட சேவை
ADDED :6 hours ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவின் 5ம் நாளான இன்று(ஆக.10) காலை பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவில் ஐந்து கருட சேவையும் நடக்கிறது.
காலை 10:00 மணிக்கு மேல் ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் எழுந்தருளி பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன், ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு 10:00 மணிக்கு மேல் கோயிலில் பெரியாழ்வார் சின்ன அன்ன வாகனத்திலும், ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் கருட வாகனத்தில் எழுந்தருளும் ஐந்து கருட சேவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.