உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புளியம்பாக்கம் அம்மன் கோவிலில் வளைகாப்பு விழா விமரிசை

புளியம்பாக்கம் அம்மன் கோவிலில் வளைகாப்பு விழா விமரிசை

வாலாஜாபாத்: புளியம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி திருநங்கைகள் பங்கேற்ற வளைகாப்பு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. வாலாஜபாத் ஒன்றியம், புளியம்பாக்கம் கிராமத்தில் முத்துமாலை நகர் உள்ளது. இங்குள்ள சிவசக்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், எல்லையம்மன், துலுக்கணத்தம்மன் சன்னிதி உள்ளன.

இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளைகாப்பு விழா திருநங்கைகள் சார்பில் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. புளியம்பாக்கம் மற்றும் வாலாஜாபாத் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான திருநங்கைகள் இவ்விழாவில் சீர் வரிசையுடன் பங்கேற்றனர்.

அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதணையை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள திருமணமான பெண்கள் மற்றும் கர்ப்பிணியரை கோவிலுக்கு அழைத்து வந்தனர். அவர்களுக்கு நெற்றியில் குங்குமம் வைத்து, முகத்தில் சந்தனம் பூசி தாங்கள் கொண்டு வந்திருந்த புடவை, பூ, வளையல் போன்றவற்றை அணிவித்து வளைகாப்பு விழா நடத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கும் வளைகாப்பு பொருட்கள் சமர்ப்பித்து தீபம் ஏற்றி வழிபட்டனர். திருநங்கைகளின் தாய்மை உணர்வை போற்று விதமாக கருதி இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறுவதாக தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !