உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனின் டெய்லர் யார் தெரியுமா?

இறைவனின் டெய்லர் யார் தெரியுமா?

ஆண்டவன் ஆசியில், வித விதமாய் ஆடை அணிந்து  மகிழ்கிறோம். சபரிமலை, பழனி பாதயாத்திரையின் போது, வேறு விதமான உடை அணிகிறோம். கடவுளை பின்பற்றும் நமக்கே இத்தனை உடை வேறுபாடு இருக்கும் போது, கடவுளின் உடை எப்படி இருக்கும்! அதை வடிவமைக்க எத்தனை சிரத்தை  எடுப்பார்கள்? "எதையும் எளிதாய்  நினைப்பது தவறில்லை; ஆனால் எதுவும் எளிதாய் கிடைப்பதாக நினைப்பது தான், தவறு, என்பார்கள் அல்லவா, அது போலத்தான், கடவுளுக்கு ஆடை தயாரிக்கும்  பணியும், அவ்வளவு எளிதல்ல.  ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்துவமான ஆடைகளை நம்முன்னோர் அடையாளம் காட்டியுள்ளனர். அந்த வரிசையில், தமிழ்  கடவுளான முருகப்பெருமானுக்கு, ஒவ்வொரு படைவீட்டிற்கும் தனி அலங்காரம் உண்டு. மூன்றாம் படை வீடான பழநியாண்ட வரின் பிரதான அலங்காரம்(ஆடை) என்றதும் நினைவுக்கு வருவது, "ராஜஅலங்காரம்; அதன் பின் வேடர், பாலசுப்பிரமணியர்,  வைதீகாள், சாது அலங்காரங்கள்,  இவைகள் தான். பழநியாண்டவரின் அலங்கார ஆடைகள், மற்றும் அதன் தொடர்பான வஸ்திரங்களை செய்து வருபவர், பழநியைச் சேர்ந்த வி.எஸ்.சக்கரபாணி பிள்ளை சன்ஸ் உரிமையாளர் எஸ். முனுசாமி.  தலைமுறை கடந்து இத்தொழிலை தொடர்ந்து வருகிறார். 30 ஆண்டுகளுக்கு முன், கும்பகோணத்திலிருந்து பழநிக்கு வந்து சுவாமிக்கு ஆடைகள், குடைகள், தொம்பைகள், பட்டு, முத்து சிலைகள்,  தேர்த்துணி, காவடி ஆகியவற்றை, கலை நயத்துடன் தயார் செய்து வருகின்றனர்.  பழநி மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர், கனடா, இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு பக்தர்களுக்கும், ஆடைகள் தயார் செய்து அசத்தி வருகின்றார்.  ஒரு முறை, ஜனாதிபதி வெங்கட்ராமனின் பாராட்டை, இவரின் தயாரிப்பு பெற்றது. சிறப்புகளை கடந்து, தெய்வத்திற்காக உழைக்கிறோம் என்ற பெருமையை சுமந்து நிற்கும் அவரிடம் கேட்ட போது, ""பழநியாண்டவரின் புகழ்பெற்ற  "ராஜ அலங்கார" ஆடையை, வேறு யாரும் தயாரிப்பது இல்லை. நான் தயாரிக்கும் ஆடையை, தண்டாயுத பாணிக்கு அணிவிக்கப்படுகிறது என்பதே, இறைவன் எனக்கு கொடுத்த மிகப்பெரிய பாக்கியமாக  கருதுகிறேன்.  ரூ.1,800 முதல், சுவாமிக்கு அலங்கார ஆடைகள், குடைகள், காவடித் துணிகள் தயார் செய்து, பக்தர்கள் காணிக்கைக்கு வழங்குகிறோம். இறைவனுக்கு  இறைவன் பழநியாண்டவர்; அவருக்கு நான்  தையல்காரன் என்பது, எனக்கு பெருமை தானே சார்... என்றார், பெருமிதமாய்.  நம் எண்ணங்களை, வண்ணமாய் மாற்றும்  இறைவனை, வண்ணமயமாய் மாற்றும் அலங்காரத்திற்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்த இது போன்ற கலைஞர்களை, நாம் வாழும் தருணத்தில் அறிந்து கொள்வது அவசியம். சுவாமி அலங்கார ஆடைகள் தேவையென்றால், 94430 23172ல் தொடர்பு  கொள்ளலாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !