உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

தொட்டிபாளையம், பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. வெள்ளமடை அருகே தொட்டி பாளையத்தில், 200 ஆண்டுகள் பழமையான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், பத்ரகாளி அம்மன், முருகர், மதுரை வீரன், ஆகாச ராயர் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டன.

புதிதாக பீமன், குந்திதேவி, மகா சூரன் தெய்வங்கள் நிறுவப்பட்டு திருப்பணி செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த 21ம் தேதி துவங்கியது. பக்தர்கள் முளைப்பாரி, தீர்த்த குடம் மற்றும் கோபுர கலசங்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். நேற்று முன்தினம் காலையில் இரண்டாம் கால வேள்வி பூஜையும், மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடந்தது.

நேற்று காலை 7:25 மணிக்கு பத்ரகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கும், இதையடுத்து, விநாயகர், பத்ரகாளியம்மன், முருகர், மதுரை வீரன், ஆகாச ராயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், வாராஹி மணிகண்ட சுவாமிகள் தலைமையில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, தச தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !