காஞ்சிபுரத்தில் சுந்தரம்மன், படவேட்டம்மன் கோவில்களில் விழா நிறைவு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள இரண்டு அம்மன் கோவில்களில் மஞ்சள் நீராட்டுடன் ஐந்து நாட்களாக நடந்து வந்த கூழ்வார்த்தல் விழா நேற்று நிறைவு பெற்றது.
காஞ்சிபுரம் வி.என்.பெருமாள் தெருவில் உள்ள விக்னராஜ விநாயகர் கோவில் வளாகத்தில், சுந்தரம்மனுக்கும், படவேட்டம்மனுக்கும் 44வது ஆண்டு கூழ்வார்த்தல் விழா மற்றும் 15வது ஆண்டு தீமிதி திருவிழா, கடந்த 3ம் தேதி தொடங்கியது. நிறைவு நாளான நேற்று, காலை 9:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், மதியம் 1:00 மணிக்கு அம்மனுக்கு சீர்கஞ்சி வார்த்தலும் நடந்தன. மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைக்கப்பட்டு மஞ்சள் நீராட்டுடன் கூழ்வார்த்தல் விழா நிறைவு பெற்றது. காஞ்சிபுரம் சி.எஸ்.செட்டி தெரு வரசித்தி விநாயகர் கோவிலில், படவேட்டம்மனுக்கும், சுந்தராம்பாளுக்கும் 30வது ஆண்டு கூழ்வார்த்தல் மற்றும் தீமிதி திருவிழா கடந்த 3ம் தேதி தொடங்கியது. இதில், நிறைவு நாளான நேற்று காலை 9:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு சீர்கஞ்சி வார்த்தலும் நடந்தன. மாலை 4:00 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் கூழ்வார்த்தல் விழா நிறைவு பெற்றது.