கோவிலில் ஷெட் இன்றி தேர் வீணாகும் அவலம்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் ராஜராஜசோழன் காலத்துக்கு முன் கட்டப்பட்ட ஹஸ்ததாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ராஜராஜசோழன் திருப்பணிகள் செய்ததாக கல்வெட்டு உள்ளது. இக்கோவிலில் ஆனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் தேர் திருவிழா நடக்கும்.
தமிழக அரசு சார்பில் புதியதாக தேர் செய்ய 43 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்தது. 119 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 4 ஆண்டுக்கு முன் ஆனி மாதம் நடந்த பிரம்மோற்சவ விழாவில் தேர் திருவிழா நடந்தது.
திருவிழா முடிந்ததும் கோவிலுக்கு வெளியே சாலையோரம் திறந்த வெளியில் தேர் நிறுத்தப்பட்டுள்ளது. ஷெட் இல்லாததால் தார்பாய் மூலம் மூடி வைத்தனர். தாய் பாய் காற்றில் கிழிந்து சேதமானது. ஷெட் வசதி இல்லாததால் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் தேர் வீணாகிறது. தேர் நிறுத்த ஷெட் வசதி ஏற்படுத்த வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.