உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று விநாயகர் சதுர்த்தி: வரம் தருவாய் விநாயகா!

இன்று விநாயகர் சதுர்த்தி: வரம் தருவாய் விநாயகா!

விநாயகர் அருள்

* அவ்வையார் பாடிய விநாயகர் அகவலையும், கச்சியப்ப முனிவர் பாடிய காரியசித்தி மாலையையும் பாடினால் விநாயகர் அருள் கிடைக்கும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.
* விநாயகர் சதுர்த்தியை தேசிய விழாவாக கொண்டாடியவர் சுதந்திர போரட்ட வீரர் திலகர். சுதந்திரம் என்னுடைய பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன் என முழக்கமிட்ட இவர், இந்தியா முழுவதும் விநாயகரை வழிபடும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.
எங்கும் இருப்பவர்
* சிவன் கோயில்களில் விநாயகர், கணபதி, பிள்ளையார் என்ற பெயர்களுடனும், சில பெருமாள் கோயில்களில் தும்பிக்கையாழ்வார் என்ற பெயரிலும் விநாயகர் இருப்பார்.
* கோயிலின் நுழைவு வாயில், ராஜகோபுரம், கொடிமரம், துவார பாலகருக்கு அருகிலும் விநாயகரை பிரதிஷ்டை செய்வது வழக்கம்.
* தேருக்கு அருகிலுள்ள விநாயகரை தேரடி விநாயகர் என்றும், தெப்பக்குளத்திற்கு அருகில் இருப்பவரை படித்துறை விநாயகர் என்றும், சன்னதி உள்ள இடத்தை பொறுத்து கன்னி மூலை விநாயகர், ஈசான்ய விநாயகர் என்றும் அழைப்பர். இப்படி எங்கும் இருப்பவர் விநாயகர்.

வித்தியாசமான விநாயகர்

* கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் கணேசாயினி என்ற பெண் வடிவ விநாயகர் இருக்கிறார்.
* தென்காசி சங்கரன்கோவிலில் உள்ள கன்னிமூல கணபதியின் கையில் பாம்பு உள்ளது.
* மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள கற்பக விநாயகரின் கையில் கரும்பு உள்ளது.
* திண்டுக்கல் கோபால சமுத்திர குளக்கரை 108 விநாயகர் கோயிலில் ஒரே கல்லில் உருவான 32 அடி உயர விநாயகர் உள்ளார்.
* கோயம்புத்துார் ஈச்சனாரி விநாயகருக்கு 27 நட்சத்திரத்திற்கும் 27 அலங்காரம் செய்கின்றனர்.
* புதுச்சேரியில் புற்று மண்ணால் ஆன சுயம்பு விநாயகரை அக்கா சுவாமிகள் பிள்ளையார் என அழைக்கின்றனர்.
* சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாஷ் கோயிலில் ஆதியந்த பிரபு (விநாயகரும், ஆஞ்சநேயரும் இணைந்த கோலம்) இருக்கிறார்.
* காசிக்கு செல்பவர்கள் அங்குள்ள டுண்டி விநாயகரை வழிபட்டால் தான் புண்ணியம் கிடைக்கும்.

தொழில் வளர்ச்சிக்கு...

* கணபதி ஹோமம் நடத்தினால் தடை விலகும்; தொழில் வளர்ச்சி ஏற்படும்.
* விநாயகருக்கு ஆயிரம் மோதகம் நைவேத்யம் செய்தால் நினைத்தது நடக்கும்.
* நெல் பொரியை கணபதி ஹோமத்தில் இட்டால் புகழ் கிடைக்கும்.
* அருகம்புல்லைக் கொண்டு ஹோமம் செய்தால் துன்பம் விலகும்.

விநாயகரை வழிபட்டால்...

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.

அருகம்புல், பூக்களால் விநாயகரை அர்ச்சனை செய்தால் நாம் சொன்னது பலிக்கும். நல்ல மனமும், குணமும் உருவாகும். மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். நோய் நீங்கும்.


புராணம் படித்தால்...

சகோதரருடன் சண்டை, சொத்து பிரச்னை, கண் கோளாறு, தொழில் தடையால் நீங்கள் சிரமப்படுகிறீர்களா... செவ்வாய்க்கிழமையும்,
சதுர்த்தி திதியும் சேரும் நாளில் விரதம் இருங்கள். அன்று அதிகாலையில் (4:30 - 6:00 மணிக்குள்) விநாயகர் புராணத்தை படிக்கத் தொடங்குங்கள். தினமும் குறைந்தது பத்து செய்யுள்களை படியுங்கள். பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை இதை தொடருங்கள். புராணத்தை முடிப்பதற்குள் நன்மை கிடைக்கும்.


ஐந்து கைகள்

ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள், ஆறு எழுத்து மந்திரம் கொண்டவர் விநாயகர். இவருடைய ஐந்து கைகளும் ஐந்து தொழில்களைச் செய்கின்றன.

கும்பம் ஏந்திய கை - படைத்தல்
மோதகம் ஏந்திய கை - காத்தல்
அங்குசம் ஏந்திய கை - அழித்தல்
பாசக்கயிறு ஏந்திய கை - மறைத்தல்
தந்தம் ஏந்திய கை - அருளல்

குழந்தைகளின் மனதில்...

கீழ்க்கண்ட பாடல்களை பாடி குழந்தைகளின் மனதில் பக்தியை விதைப்போம்.

குள்ள குள்ளனே குண்டு வயிற்றோனே
வெள்ளி கொம்பன் விநாயகனை தொழுவோம்.
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே.


பூஜைக்கு தயார்


* களிமண், மஞ்சள், சந்தனம், பசுவின் சாணம் ஆகியவற்றில் ஏதோ ஒன்றை கையால் பிடித்து வைத்தாலும், பூஜைக்கு விநாயகர் தயாராகி விடுவார்.
* அருகம்புல், செம்பருத்தி, எருக்கம்பூ, மாவிலை, வில்வ இலைகள் விநாயகருக்கு விருப்பமானவை.
* சதுர்த்தி அன்று கரும்பு, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, புட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, கடலை ஆகியவற்றில் பிடித்தமானதை நைவேத்தியம் செய்யுங்கள்.


அண்ணனுக்கும் ஆறெழுத்து

முருகப்பெருமானுக்கு சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரம் இருப்பது போல, அவரின் அண்ணனுக்கும் விநாயகருக்கும் ஆறெழுத்து மந்திரம் உள்ளது.
ஓம் வக்ர துண்டாய ஹும் என்பதே அந்த மந்திரம். தினமும் இதை படித்தால் பகை நீங்கும். முருகப்பெருமான் இதை ஜபம் செய்து தாரகாசுரனை வெற்றி பெற்றார்.
வாமனர் இதை ஜபித்து மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். பரசுராமர் இதை தினமும் ஜபித்து 21 தலைமுறை மன்னர்களை அழித்தார்.


கிரகதோஷம் தீர...

சென்னை-திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டுச் சாலையில் திருமலை வையாவூர், வேடந்தாங்கல் செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது அமிர்தபுரி. இங்கு 8 அடி உயரமுள்ள விநாயகரின் உடலில் நவக்கிரகம் உள்ளது.

நெற்றி - சூரியன்
தலை - குரு
வயிறு - சந்திரன்
வலது மேல் கை - சனி பகவான்
வலது கீழ் கை - புதன்
இடது மேல் கை - ராகு
இடது கீழ் கை - சுக்கிரன்
வலது கால் - செவ்வாய்
இடது கால் - கேது. அதனால் இவரை நவக்கிரக விநாயகர் என அழைக்கின்றனர்.
இவரை வழிபட கிரக தோஷம் விலகும். இவருக்கு பின்புறம் யோக நரசிம்மர் இருக்கிறார்.

முதல் கொழுக்கட்டை

* முதன் முதலில் கொழுக்கட்டை நைவேத்தியம் செய்தவர் வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி.
* சதுர்த்தி அன்று கொழுக்கட்டை தானம் செய்தால் நினைத்தது நிறைவேறும்.
* இலங்கை, மியான்மர், பாலி, ஜாவாதீவுகள், இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரீஸ் போன்ற நாடுகளில் விநாயகர் வழிபாடு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !