புரட்டாசி முதல் சனி: பூலோக வைகுண்டம்.. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அலைமோதும் பக்தர்கள்
திருச்சி; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துளளனர்.
புரட்டாசி மாதம் நம்பெருமாளுக்கு உகந்த மாதமாகும், இம்மாதத்தில் சனிக்கிழமைகளில் விரதமிருந்து நம்பெருமாளை வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மற்றும் பிறமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாள், சக்கரத்தாழ்வார், கிருஷ்ணர் சன்னதி, தாயார் சன்னதியில் எள், மற்றும் நெய்விளக்கிட்டும் மற்றும் அணையாவிளக்கில் தாங்கள் கொண்டுவந்த நெய்யை ஊற்றி வழிபாடு செய்துவருகின்றனர். வரிசையில் நிற்கும் வயதான பக்தர்கள் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் வெண்பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வருகையையொட்டி கூட்டநெரிசலின்றி வழிபாடு செய்வதற்காக ஆலய நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி சிசிடிவி கேமராக்கள் மூலம் பக்தர்களின் வருகையை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்ய சுமார் ஒரு மணி நேரம் ஆகும் நிலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் மதியத்திற்கு மேல் சுமார் 2 மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படலாம் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.