திருவொற்றியூர் கல்யாண வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்
சென்னை: சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில், புரட்டாசி முதல் வாரத்தை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் நிலையில், முதல் வாரத்திலேயே அதிகாலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினர். குடும்பத்துடன் வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டு, தங்களது நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றினர். இதனை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. மூலவர் ஸ்ரீ கல்யாண வரதராஜப் பெருமாளுக்கு முத்து அங்கி அணிவிக்கப்பட்டு, முத்து மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், உற்சவர் பவளவண்ணப் பெருமாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, லவங்கம் மற்றும் முந்திரியால் அழகிய மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குறிப்பாக, பவளவண்ணப் பெருமாள் சன்னதி முன்பாக பெண்கள் இணைந்து, பல்வேறு வண்ண கோலமாவுகளைப் பயன்படுத்தி கருட வாகனத்தில் பெருமாள் காட்சியளிப்பது போன்ற அழகிய கோலத்தை வரைந்திருந்தனர்.
பெருமாளின் திருவுருவத்தை பிரதிபலிக்கும் வகையில் வண்ணமயமாக அமைக்கப்பட்டிருந்த இந்த கோலம், கோயிலுக்கு வந்த பக்தர்களையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை தரிசித்த பக்தர்கள், பக்திப் பரவசத்துடன் “கோவிந்தா... கோவிந்தா...” என முழக்கமிட்டு வழிபட்டனர். புரட்டாசி முதல் வாரத்தையொட்டி கோயில் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்ட நிலையில், பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டிருந்தன. புரட்டாசி மாதத்தின் அடுத்தடுத்த சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கல்யாண வரதராஜப் பெருமாளின் அருளைப் பெற தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தர உள்ளனர்.