பெருக்கரணை வந்த மரகத முருகர் சிலை ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சித்தாமூர்: பெருக்கரணை கிராமத்தில் காணமல் போன மரகத முருகர் சிலை போலீசாரால் மீட்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். சித்தாமூர் அருகே பெருக்கரணை கிராமத்தில் ‘நடுபழனி’ என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற மரகத தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 2ம் தேதி மரகத கல்லால் செய்யப்பட்ட மூலவர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதையடுத்து, ஆறு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த மூவரை தனிப்படை போலீசார் கைது செய்து, மரகத முருகர் சிலையை மீட்டனர்.
இந்த சிலை செய்யூர் கருவூலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் கோவில் நிர்வாகம் சார்பில், மரகத சிலைக்கு உரிமை கோரி மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மரகத சிலையை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, செய்யூர் கருவூலத்தில் இருந்து கோவில் நிர்வாகத்திடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சித்தாமூர் சாலை சந்திப்பில் இருந்து, ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட முருகர் சிலைக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் கோவில் அடிவாரத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகரை, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., அய்மன் ஜமால் தரிசித்தார். பின் பக்தர்கள் தரிசனம் செய்தபின், சிலையை கோவில் நிர்வாகத்தினர் பாதுகாப்பான அறையில் வைத்தனர். அடுத்த சில வாரங்களில் முறையாக பிரதிஷ்டை செய்து, சிலை மீண்டும் கருவறையில் வைக்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.