உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மெதுார் பர்வதீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் மீண்டும் தொடக்கம்

மெதுார் பர்வதீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் மீண்டும் தொடக்கம்

பொன்னேரி: மெதுார் பர்வதீஸ்வரர் கோவில் திருப்பணிகள் முடங்கி கிடந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளதால், தடையின்றி பணிகளை முடித்து, விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காமாட்சி சமேத பர்வதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்ததை தொடர்ந்து, கடந்த 202ல் ஹிந்து சமய அறநிலைத்துறை, 43.60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, புனரமைப்பு பணிகளை தொடங்கியது. அதையடுத்து, கோவிலின் பழமை மற்றும் கட்டட கலை மாறாமல், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிமென்ட், கம்பி உள்ளிட்டவற்றை பயன்படுத்தாமல், சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம் ஆகியவற்றை பயன்படுத்தி, பழங்கால கட்டட கலையையை பின்பற்றி, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அர்த்த மண்டபம், மகா மண்டபம், காமாட்சியம்மன், முருகன், விநாயகர், ஏழுமலையான் சன்னிதிகள் புதுப்பிக்கப்பட்டன.


இப்பணிகள் அவ்வப்போது நிறுத்தப்படுவதும், பின் மீண்டும் துொடங்குவதுமாக இருப்பதால், ஆறு ஆண்டுகள் ஆகியும் முழுமை பெறாமல் உள்ளது. இந்நிலையில், கடந்த எட்டு மாதங்களாக, திருப்பணிகள் ஏதும் நடைபெறாமல், கோவில் முடங்கி கிடந்தது. இது குறித்து, அவ்வப்போது ந நாளிதழில் செய்திகள் வெளியாகி வந்தன. அதை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக, கோவிலின் திருப்பணிகள் மீண்டும் நடைபெற்று வருகின்றன. தற்போது, நடராஜர் சன்னிதி கோபுரத்திற்கான கட்டுமனை பணிகள் நடந்து வருகின்றன. கோவில் சிதிலமடைந்ததில் இருந்து, கடந்த எட்டு ஆண்டுகளாக, பிரதோஷம், பிரம்மோத்சவம் உள்ளிட்டவை நடைபெறாததால், எஞ்சிய பணிகளை துரிதமாக முடித்து, கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !