வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்கு பிறகு புதிய யானை
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய யானை கொண்டு வரப்பட்டது, தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் சிறப்பு பூஜைகள் செய்து முத்தையா என பெயர் சூட்டினார்.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான வைத்தியநாதசுவாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது, நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய ஆலயமான இது புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்திற்கு சொந்தமான தையல்நாயகி கடந்த 2003 ஆம் ஆண்டு, மதம் பிடித்து டாப்ஸ்லிப் யானையில் முகாமிற்கு அனுப்பப்பட்ட நிலையில் உடல்நல குறைவு காரணமாக யானைகள் அந்த யானை இறந்தது. தொடர்ந்து கோவிலுக்கு புது யானை கொண்டு வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். வெளி மாநிலங்களில் இருந்து யானை கொண்டு வருவதற்கு தமிழக வனத்துறையினர் தடையில்லா சான்று அளிக்காத நிலையில், உயர்நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பில் தமிழகத்தில் 5 கோயில்களுக்கு யானைகள் வழங்க தடையில்லா சான்று வனத்துறை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் சார்பில் சென்னை சேவா டிரஸ்ட் மூலம் அசாமில் இருந்து ரூப் சிங் என்ற 13 வயது ஆண் யானை வாங்கப்பட்டு இன்று காலை கோயிலுக்கு அழைத்துவரப்பட்டது. இதனை அடுத்து தருமபுரம் ஆதீன 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் யானைக்கு சிறப்பு கஜ பூஜை செய்தனர். தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் புதிய யானைக்கு முத்தையா என பெயர் சூட்டி பழங்கள் வழங்கி கோவிலில் யானை ஒப்படைக்கப்பட்டது. வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான், சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான், மாவட்ட வளர்ப்பு யானைகள் குழு உறுப்பினர் உறுப்பினர் டாக்டர் சிவகணேசன், ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 23 ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புதிய யானை கொண்டு வரப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.