திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மாற்றுவழிக்கு பக்தர்கள் கோரிக்கை
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மூலஸ்தானத்தில் இருந்து பக்தர்கள் வெளியேறுவதில் உள்ள சிரமத்தை போக்க, ஸ்தபதிகள் ஆலோசனைப்படி மாற்றுவழி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் தெரிவித்தார். திருப்போரூரில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோருக்கு, பிரார்த்தனை ஸ்தலமாக திகழ்கிறது. இதன் காரணமாக கிருத்திகை, சஷ்டி விழா நாட்கள் மற்றும் அரசு விடுமுறை தினங்களில், ஏராளமானோர் வந்து செல்கின்றனர். விழா நாட்களில், நீண்ட வரிசையில் நின்று மூலவரை தரிசித்து வெளியேற, மூன்று மணி நேரத்திற்கு மேலாகிறது. மூலஸ்தானத்திற்கு செல்வதற்கும், வெளியேறுவதற்கும், ஒரு வழி மட்டும் உள்ளதால், பக்தர்கள் நெரிசலில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. சமீபத்தில், கோவில் திருப்பணிகளை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபாலிடம், "மூலவரை தரிசித்துவிட்டு வெளியேற, சக்கரஸ்தாபனம் அருகே ஒரு வழி ஏற்படுத்தி தர வேண்டும், என, பக்தர்கள் கோரினர். அப்போது, ""கோவிலின் ஆகமவிதியின்படி, ஸ்தபதிகளுடன் கருத்தினை கேட்டு, மாற்றுவழி உருவாக்க ஆலோசிக்கப்படும். அதில், வாய்ப்பு இருப்பின், மாற்று வழி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.