இன்று பவுர்ணமி, உமாமகேஸ்வர விரதம்: ஈசனை வழிபட பதினாறு பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழலாம்!
சூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் நேர்பார்வையில் வீற்றிருக்கும் பவுர்ணமி தினம் வழிபாட்டுக்குரிய மிக சிறந்த நாளாகும். பரிபூரணமாகப் பிரகாசிக்கும் சந்திரனின் ஒளியில் கிரிவலம் வந்து வழிபடுவதால் ஆத்மபலமும், மனோபலமும் கிடைக்கும். எங்கும் நிறைந்த சிவசக்தி வடிவத்தை வழிபடும் உன்னதமான விரதம் உமா மகேஸ்வர விரதம். திருக்கைலையில் பொன்னும் மணியும் சேர்ந்து அமைந்த ஆசனத்தில் சிவபெருமான் தமது தேவியுடன் எழுந்தருளியுள்ளார்.
சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும் தந்தையாவார். அதுபோல உமாதேவியே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்குமே அன்னையாக விளங்குபவள். அவர் தன்னுடைய இறைவனாகிய சிவபெருமானின் என்னப்படியே அனைத்துச் செயல்களையும் செய்து வருகின்றார். பூவிலிருந்து மணத்தையும், நெருப்பிலிருந்து புகையையும் எப்படி பிரிக்க முடியாதோ அதுபோல் இவர் சிவத்திடம் ஐக்கியமானவராவர். மகாலட்சுமியை பிரிந்த திருமால் இந்த உமாமகேஸ்வர விரதம் இருந்துதான் மகாலட்சுமியை அடைந்தார் என்கிறது புராணம். 16 முடிச்சு உள்ள சிவப்பு நிற நோன்பு கயிற்றை பூஜையில் வைத்து சிவ சக்தியை வழிபட்டு கையில் கட்டிக் கொள்வது சிறப்பு.. வீட்டில் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து உமாமகேஸ்வர வழிபட கருத்து வேறுபாடுகள் நீங்கி சர்வ மங்களங்களும் உண்டாக்கும்.