உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மறக்ககூடாத மஹாளய பட்சம் இன்று ஆரம்பம்; முன்னோர்களை வழிபடுவோம்.. நீங்கா செல்வம் பெறுவோம்!

மறக்ககூடாத மஹாளய பட்சம் இன்று ஆரம்பம்; முன்னோர்களை வழிபடுவோம்.. நீங்கா செல்வம் பெறுவோம்!

மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். பட்சம் என்றால் 15 நாட்கள். முன்னோர்கள் 15 நாட்கள் நம்முடன் தங்குகின்ற காலமே மகாளய பட்சம். நம் வீட்டை அவர்கள் சுற்றி வருவதாக ஐதீகம்.


இக்காலத்தில் சுபநிகழ்ச்சி நடத்தக் கூடாது. இறந்தவர்கள் பாவி என்றால் யமபுரத்திற்கும், புண்ணியம் செய்திருந்தால் பிரம்மலோகத்திற்கும் செல்வர். அவர்கள் தங்களின் வாரிசுகளை பார்க்க பூமிக்கு வரும் காலம் மகாளயபட்சமாகும். அதாவது புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரையுள்ள 15 நாட்கள். அப்போது தமக்குரிய பிண்டத்தை வழங்குமாறு நம் வீட்டு வாசலில் காத்திருப்பர்.


முன்னோர் இறந்த மாதம், பட்சம், திதியன்று ஒவ்வொரு ஆண்டும் திதி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தில் சிரமம், பிரச்னை, துர்சம்பவம் ஏற்படும். மீண்டும் முன்னோர் வழிபாட்டை மேற்கொண்டால் துன்பம் தீரும். சிலருக்கு முன்னோர்கள் இறந்த திதி தெரிவதில்லை. அவர்களும் மகாளயபட்சத்தில் திதி கொடுக்கலாம். மகாளயபட்ச தர்ப்பணத்தால் ஓராண்டுக்கு திதி கொடுத்த புண்ணியம் சேரும். மற்ற மாதங்களில் அமாவாசை தர்ப்பணம் செய்யும் வழக்கம் உள்ளவர்களும் இதை தவிர்க்கக் கூடாது. தந்தை இறந்த திதியில் இந்த தர்ப்பணம் செய்வது நல்லது. தர்ப்பணத்தின் போது மூன்று தலைமுறையினர் அதாவது தந்தை, தாத்தா, முப்பாட்டனார், தாயார், பாட்டி, முப்பாட்டியின் பெயர்களை குறிப்பிட வேண்டும். திதி தெரியாதவர்கள் அஷ்டமி அல்லது பரணி நட்சத்திரத்தில் செய்யலாம். இக்காலத்தில் அசைவம், வெங்காயம், பூண்டு சேர்க்காமல் வீட்டில் மட்டும் சாப்பிட வேண்டும். எண்ணெய்க் குளியல், தாம்பத்யம் தவிர்க்க வேண்டும். இன்று மகாளய பட்சம் துவங்குகிறது. 


இன்று முதல் அமாவாசை வரை 15 நாட்கள் முன்னோர்கள் எமதர்மனின் அனுமதியுடன் நம்மைக் காண பூலோகத்திற்கு வருகின்றனர். அவர்களை வரவேற்பது நம் கடமை. இந்த நாட்களில் புனித தலங்களில் தர்ப்பணம் செய்து ஏழைகளுக்கு தானம் அளிப்பது சிறந்ததாகும். வீட்டில் விளக்கேற்றி அமைதியாக அமர்ந்து முன்னோரை மனதால் நினைத்தாலும் பெரும் புண்ணியம் சேரும்.இன்று முன்னோரை வழிபட்டு அவர்கள் ஆசி பெறுவோம்.. மன வருத்தம் விலகி மனநிறைவுடன் வாழ்வோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !