உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி சுவாமிகள் இன்று மதுரை வருகை

காஞ்சி சுவாமிகள் இன்று மதுரை வருகை

மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை இங்கு தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.

காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிேஷகத்திற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விரத காலத்தில் சுவாமிகள் வேறு எங்கும் செல்வதில்லை. அந்த விரத காலம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து முதல் யாத்திரையாக சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். இன்று மாலை 6:30 மணிக்கு சோழவந்தான் முள்ளிப்பள்ளத்தில் உள்ள காஞ்சி மடத்திற்கு வருகை தரும் சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். தொடர்ந்து தேனுாரில் உள்ள சுப்ரஜா வளாகத்தில் இரவு தங்குகிறார்.

மறுநாள் காலை 7:00 மணிக்கு சோலைமலை முருகன் கோயில், திருவேடகம் கோயில்களுக்கு செல்கிறார். காலை 11:00 மணிக்கு தேனுார் வருகிறார். மாலை 6:00 மணிக்கு லட்சுமிசுந்தரம் அரங்கில் ஆர்.எஸ்.எஸ். முகாமில் பங்கேற்று ஆசியுரை வழங்குகிறார். இரவு 7:45 மணிக்கு மதுரை பெசன்ட் ரோட்டில் உள்ள மடத்திற்கு வருகிறார். அங்கு அவருக்கு மடத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

செப்.29 அதிகாலை 5:30 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கிறார். 8:30 மணிக்கு பொன்மேனி பாடசாலைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து தோப்பூரில் உள்ள சக் ஷம் தீமஹி வளாகம் செல்கிறார். காலை 10:15 மணிக்கு மடம் வந்தடைகிறார். மாலை 5:00 மணிக்கு தபால்தந்தி நகரில் உள்ள வைதீக சமாஜம் செல்லும் சுவாமிகள் மாலை 6:30 முதல் இரவு 8:30 வரை வசந்தநகர் வசுதாரா வளாகத்தில் திருவிளக்கு பூஜையை நடத்தி வைக்கிறார். இரவு 9:00 மணிக்கு பெசன்ட் ரோடு மடத்திற்கு திரும்புகிறார்.

செப்.,30 காலை 8:00 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயில் செல்கிறார். 12:30 மணிக்கு மடத்திற்கு திரும்புகிறார். மாலை 5:00 மணிக்கு சிம்மக்கல்லில் உள்ள பாதுகா மடம், ஹிந்து மிஷன் மருத்துவமனைகளை பார்வையிடுகிறார். மாலை 6:30 மணி முதல் பெசன்ட் ரோடு மடத்தில் ஆசி வழங்குகிறார்.

அக். 1 காலை 8:00 மணிக்கு ஆசி வழங்குதல், மடத்தில் காமாட்சி அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் செய்கிறார். மதியம் 12:00 மணிக்கு மேலுார் செல்கிறார். மேலுார் ஆட்டுக்குளம் எஸ்.எஸ்.வி., சாலா பள்ளியில் 2:00 மணி வரை பக்தர்களுக்கு ஆசி வழங்கிவிட்டு திருச்சி வழியாக விழுப்புரம் செல்கிறார். சுவாமிகள் வருகைக்கான ஏற்பாடுகளை வரவேற்பு குழுவினர் செய்துள்ளனர்.

சங்கராச்சாரியார்கள் சாதுர்மாஸ்ய விரதம் விஸ்வரூப தரிசன யாத்திரையுடன் நிறைவு

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்கள் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகிய இருவரும், ஜூலை 29ம் தேதி குருபூர்ணிமா நாளில், சாதுர்மாஸ்ய விரதம் தொடங்கினர். காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் தங்கி, விரதத்தை கடைபிடித்தனர். பவுர்ணமி நாளான நேற்று, சங்கராச்சாரியார் சுவாமிகள் விஸ்வரூப யாத்திரையாக, அருகில் உள்ள ஓரிக்கை திரவுபதி அம்மன் கோவிலில் எழுந்தருளி, விரதத்தை நிறைவு செய்தனர்.

நுால் வெளியீடு சாதுர்மாஸ்ய விரதத்தின் நிறைவு விழாவையொட்டி, ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டபத்தில், ‘காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பாரம்பரியம்’ என்ற நுாலை, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட, உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பெற்றுக் கொண்டார்.

விழாவில், விஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை: பாரம்பரியம் என்பது நாட்டை ஒற்றுமைப்படுத்தவும், வலுப்படுத்தவும் உதவுகின்றன. ஆதிசங்கரரால் விதைக்கப்பட்ட வேதாந்த கருத்துக்களைத் தான் இன்றும் மக்கள் கடைப்பிடிக்கின்றனர். முதியோர், முன்னோரை நாம் கவுரவப்படுத்தி, அதன் மூலம் நாம் முன்னேற வேண்டும். இதை தன் உபதேசங்கள் மூலம் நிருபித்துக் காட்டியவர் ஆதிசங்கரர். காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகளாக இருந்த மகா பெரியவர், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எல்லாம், பல்வேறு இடையூறுகளை தாண்டி தேசத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டனர். இவர்களின் செயல்கள் உட்பட காஞ்சிபுரம் மக்களுக்கு, சங்கர மடம் செய்த கல்விப்பணி, சமூகப்பணி, சமயப்பணிகளை விரிவாக, இந்த நுால் விளக்குகிறது. இவ்வாறு அவர் ஆசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !