உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி 2வது சனி; பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி 2வது சனி; பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

விருதுநகர்: 


விருதுநகர் மாவட்டத்தில் புரட்டாசி மாதத்தின் 2வது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர்.


விருதுநகரில் புரட்டாசி மாதத்தின் 2வது சனிக்கிழமையை முன்னிட்டு வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலின் பாலாஜி சன்னதி, ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ராமர் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். சுவாமிக்கு துளசி மாலை சாற்றி வழிபாடு செய்தனர்.

மேலும் ரெங்கநாத சுவாமி கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் தினமும் சுவாமி, அம்பாள் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றனர். இன்று (செப்.27)மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

* ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாம் சனி உற்ஸவம் நேற்று நடந்தது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன பூஜைகள் நடந்தது. பின்னர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர்.

மாவட்டத்தின் அனைத்து நகரங்களிலும் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. காலாண்டு தேர்வு விடுமுறை துவங்கியதால், கடந்த வாரத்தை விட இருமடங்கு பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. மாலை 4:00 மணிக்கு மேல் பெருமாள் கிரிவலம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. டி.எஸ்.பி.பாலச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

* செண்பகதோப்பு காட்டழகர் சுந்தர்ராஜ பெருமாள், வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள், குன்னூர் சுந்தர ராஜ பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி சனி உற்ஸவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாடானை: 


திருவாடானை அருகே குளத்துார் குலசேகர பெருமாள், தொண்டி உந்திபூத்த பெருமாள், பாண்டுகுடி லட்சுமி நாராயண பெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.


பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் அனந்த விரத வைபவத்தில் சேஷ வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார். மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசத்தில் தாங்கள் இழந்த ராஜ்யத்தையும், செல்வத்தையும் மீட்க கிருஷ்ண பரமாத்மா தர்மருக்கு உபதேசித்த விரதம். அப்போது 14 முடிச்சுகள் உள்ள கயிற்றை கையில் அணிந்து கொள்ள வேண்டும்.

இது தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு தரும் என்பது நம்பிக்கை. இதன்படி கோயிலில் பெருமாள் சேஷ வாகனத்தில் கிருஷ்ணனாக விஸ்வரூப நிலையில் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனைகள் நடந்து ரத வீதிகளில் உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சின்னமனூர்:


புரட்டாசி இரண்டாவது வாரத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.


சின்னமனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நின்ற நிலையில் லட்சுமி நாராயணப் பெருமாள், அவரது காலடியில் ஆஞ்சநேயர் இருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். துளசி மாலை சார்த்தி பக்தர்கள் வழிபட்டனர்.

கோம்பை திருமலைராயப் பெருமாள் கோயிலில் சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது.

மலையடிவாரத்தில் கோயில் இருப்பதால், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. உத்தமபாளையம் யோக நரசிங்கபெருமாள் கோயில் , கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் குவிந்தனர்.

போடி


விசுவாசபுரத்தில் வேங்கட வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பெருமாளின் தரிசனம் பெற்றனர். போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் முத்தங்கிசேவை அலங்காரத்தில் சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டன. ேலச்சொக்கநாதபுரத்தில் தொட்ட ராயர் ஒன்னம்மாள் கோயில், சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயில், உப்புக்கோட்டை வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது.


அதிகாலையில் திரண்ட பக்தர்கள் பெரியகுளம்: வரதராஜப் பெருமாள் கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு பெருமாளுக்கு சுப்ரபாத சேவை துவங்கியது. பால், சந்தனம், தேன், பன்னீர், இளநீர், மஞ்சள்பொடி உட்பட 16 வகையான பொருட்கள் அபிஷேகம் செய்யப்பட்டது.

திருப்பாவை சேவித்தல், மகா தீபாராதனை நடந்தது. மூலவர் வரதராஜ பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்திலும், உற்ஸவர் அனுமன் வாகனத்தில் ராமர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.

அதிகாலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... நாமம் ஒலிக்க சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனர். கோயில் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. பிரசாதம் வழங்கப்பட்டது.

பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் மலர் அலங்காரத்தில் கிருஷ்ணர், ராதை காட்சியளித்தனர்.

அகண்ட ஹரே ராம நாமகீர்த்தனம், மதுரகீதம், பஜனை, ஆன்மிகச் சொற்பொழிவு, ஊஞ்சல் சேவை, கூட்டு பிரார்த்தனை, சுவாமி புறப்பாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன் யதாஸ் செய்தார்.

பெரியகுளம் பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாசலபதி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.

உற்ஸவர் வெங்கடாஜலபதி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் காட்சியளித்தார். லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. -

துளசி பிரசாதம் தேனி: வரதராஜ பெருமாள் கோயில், எம்பெருமான் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பெருமாளுக்கு மலர்கள், வண்ண வஸ்திரங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டிருந்தது. சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தீபாராதனை நடை பெற்றது.

கூடலுார்


காஞ்சிமரத்துறை ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது.


துளசி, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கூடலுார், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, லோயர்கேம்ப், பளியன்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர். பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடினர். துளசி பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப் பட்டது.

நடராஜருக்கு பூஜை பெரியகுளம்: தென்கரை நால்வர் மடத்தில் புரட்டாசி வளர்பிறையை முன்னிட்டு, ஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி மற்றும் நால்வருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராஜேந்திர சோழீஸ்வரர் சிவனடியார்கள் அறக்கட்டளை தலைவர் குணசேகரன், செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் சுப்பிரமணி மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர் அன்னதானம் வழங்கப் பட்டது.

திருத்தணி


திருத்தணி பகுதியில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை ஒட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.


புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை ஒட்டி, திருத்தணி விஜயராகவ பெருமாள் கோவிலில், நேற்று காலை 7:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

திருத்தணி அடுத்த பொன்பாடி கொல்லகுப்பம் கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், நேற்று காலை 9:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இரவு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதேபோல், திருத்தணி அடுத்த நெமிலி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி வைகுண்ட பெருமாள் கோவிலில், நேற்று காலை 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

மதியம் 12:00 மணிக்கு உற்சவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 7:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதேபோல், திருத்தணி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பாமா, ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருத்தணி பெரிய தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவில் உட்பட திருத்தணி தாலுகாவில் உள்ள பெருமாள் மற்றும் பஜனை கோவில்களில், சிறப்பு பூஜைகள் மற்றும் உற்சவம் நடந்தன.

திருப்பூர்


புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, திருப்பூர் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் துளசி மாலை சாற்றியும், நெல்லிக்கனி சமர்ப்பித்தும் பெருமாளையும் தாயார்களையும் வழிபட்டனர்.


இந்தாண்டு புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகள் வருகின்றன. இதையொட்டி, இரண்டாவது சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் அதிகாலை 5:30 மணிக்கு, ஸ்ரீவீரராகவப் பெருமாள் பாண்டியன் கொண்டை கிரீட அலங்காரத்தில், கருட வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தர்கள் துளசி மாலை சாற்றியும், நெல்லிக்கனி சமர்ப்பித்தும் பெருமாளை வழிபட்டனர். திருப்பூர் பிரதோஷ வழிபாட்டுக் குழு சார்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அவிநாசி அருகே தாளக்கரை ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், மொண்டிபாளையம் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோவில், கருவலூர் கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள் கோவில்கள், சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில், அவிநாசி காரணப்பெருமாள் கோவில் உள்ளிட்ட திருப்பூர், அவிநாசி, பல்லடம் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பொங்கலுார்: 


கோவில்பாளையம் ராமசாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சவுக்கு கம்புகள் மற்றும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. போலீசார் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் வசதிக்காக பல்லடம், திருப்பூர், தாராபுரம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


திருப்போரூர்


புரட்டாசி மாத இரண்டாம் வார சனிக்கிழமையையொட்டி, திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று, சிறப்பு வழிபாடு நடந்தது.


புரட்டாசி மாதம் பெ ருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம்.

அந்த வகையில், புரட்டாசி மாதத்தின், இரண்டாம் வார சனிக்கிழமை என்பதால், திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று, சிறப்பு பூஜைகள் நடந்தன.

அகரம் கிராமத்தில் கோபாலகிருஷ்ண பெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல், திருப்போரூர் அடுத்த மேட்டுத்தண்டலம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், காலை 10:30 மணிக்கு, விசேஷ திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.

மானாமதி ஊராட்சியில் அடங்கிய அகரம் வைகுண்ட பெருமாள் கோவில், சிறுதாவூர், திருப்போரூர், கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

மேட்டுப்பாளையம்: 


காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி கும்பிட்டனர்.


அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறந்து, சிறப்பு திருமஞ்சனம் முடிந்த பின், அலங்காரம் செய்யப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவ மூர்த்தி அரங்கநாத பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் கோவில் வலம் வந்து, கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு மந்திர புஷ்பம், அஷ்டோத்திரம் செய்யப்பட்டது. மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தீர்த்த பிரசாதம் வழங்கிய பின், பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவர், உற்சவர் அரங்கநாத பெருமாளை வழிபட்டனர். கோவில் முன் அமர்ந்திருந்த 100க்கும் மேற்பட்ட தாசர்களுக்கு பக்தர்கள் அரிசி, பருப்பு, காய்கறியை படையல் இட்டனர். தாசர்கள் வழங்கிய பொருட்களை பக்தர்கள் வாங்கிச் சென்றனர். காரமடை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துசாமி, பணியாளர்கள் செய்திருந்தனர்.

பரங்கிப்பேட்டை


வரதராஜ பெருமாள் கோவிலில் ஏராளமானவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, பரங்கிப்பேட்டை வரதராஜபெருமாள் கோவிலில் நேற்று வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதனைகள் நடந்தன. மூலவர், திருப்பதி சீனிவாச பெருமாள் அலங்காரத்தில்பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமிதரிசனம் செய்தனர்.


கடலுார்: 


தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது.


இங்கு, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி நேற்று காலை, 3:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின், சிறப்பு பூஜைகள் முடிந்து 4:00 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மூலவர் தேவநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ‘கோவிந்தா.. கோவிந்தா’ என கோஷங்கள் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர். 2,500த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போன்று, புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி, திருப்பாதிரிப் புலியூர் வரதராஜப் பெருமாள், மஞ்சக்குப்பம் ஆட் கொண்ட வரதராஜப் பெருமாள் ஆகிய கோவில்களிலும் புரட்டாசி சிறப்பு வழிபாடு நடந்தது.

குறிஞ்சிப்பாடி


குறிஞ்சிப்பாடி பகுதியில் அமைந்துள்ள, பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை வழிபாடு நேற்று நடந்தது. காலை முதல் உள்ளூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், கோவிலில் நடந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு, பெருமாளை வழிபட்டனர். பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


செஞ்சி


செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பாவாடை உற்சவம் நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் மதியம் 12:00 மணிக்கு திருப்பாவாடை உற்சவமும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


விக்கிரவாண்டி 


விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் நேற்று காலை மூலவர் வரதராஜ பெருமாளுக்கும், உற்சவருக்கும் சிறப்பு திருமஞ்சனமும், மகா தீபாராதனையும் நடந்தது. உற்சவர் கோவில் வளாகத்தினுள் வலம் வந்து ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


விழுப்புரம் 


கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவருக்கு நேற்று காலை 5:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. 8:00 மணிக்கு வரதராஜ பெருமாள், உப்புலியப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


கள்ளக்குறிச்சி 


கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள் சுவாமிகளுக்கு நேற்று காலை சுப்ரபாத சேவை, விஸ்வரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து, பெருமாள், தாயார் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். துளசி அர்ச்சனை, அலங்கார தீப வழிபாடு, மந்திர உபசார பூஜை நடந்தது.


சங்கராபுரம் 


சங்கராபுரம் ஆற்றுப்பாதை தெருவில் உள்ள பெருமாள் கோவிலில் நேற்று காலை பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !