உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம்

 திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.


திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால், வழக்கத்திற்கு மாறாக, மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். நேற்று வெயில் கொளுத்திய போதிலும், பக்தர்கள் மலைப்பாதையில் நடந்து வந்தும், தேர்வீதியிலும், பொது வழியிலும் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.


திருத்தணி கூடுதல் எஸ்.பி., ஷுபம் திமான் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார், பஜார் மற்றும் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மலைக்கோவிலுக்கு, இருசக்கர வாகனங்கள் தவிர மீதமுள்ள அனைத்து வாகனங்களும் தடை செய்யப்பட்டிருந்தது. அதனால், கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்பட்ட, ஐந்து பேருந்துகளில், பக்தர்கள் முண்டியடித்து ஏறிச் சென்றனர். சில பக்தர்கள், கொளுத்தும் வெயிலிலும் மலைப்பாதையில் நடந்து சென்றனர். முன்னதாக, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க வேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !