ஸ்ரீபெரும்புதுார் வந்தடைந்த திருவள்ளூர் வீரராகவ பெருமாள்
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் வேதாந்த தேசிகன் 758வது அவதார விழாவை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் நேற்று ஸ்ரீபெரும்புதுார் வந்தடைந்தார்.
ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவில் பின்புறம்உள்ள குளக்கரையில் வேதாந்த தேசிகன் கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி மாதம், திருவோணம் நட்சத்திரம், வேதாந்த தேசிகனின் அவதார தின விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கும். இந்நிலையில், இந்தாண்டு வேதாந்த தேசிகன் 758வது அவதார தின விழாவுக்காக, வீரராகவ பெருமாள் திருவள்ளூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார். நேற்று காலை 7:00 மணிக்கு ஸ்ரீபெரும்புதுார் எல்லையை வந்தடைந்தார். அங்கு வேதாந்த தேசிகன் ஊர் எல்லையில் பூரண கும்ப மரியாதையுடன் எதிர்கொண்டு விரராகவ பெருமாளை அழைத்தார். ஸ்ரீபெரும்புதுார் வீதிகளில் புறப்பாடு கண்டருளி, ஸ்ரீபெரும்புதுார் அகோபில மடத்திற்கு எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் பொது தரிசனம் நடந்தது. அதன்பின், வீரராகவ பெருமாள் வேதாந்த தேசிகன் கோவிலை வந்தடைந்தார். அங்கு மதியம் 3:00 மணிக்கு, வீரராகவ பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 4:30 தேசிக பிரபந்தம் புத்தக வெளியீட்டு விளக்க உரை விழா நடந்தது. மாலை 7:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறையும், இரவு 9:30 மணிக்கு வேத திவ்யபிரபந்தம், விசேஷ நாதஸ்வரம், பஜனை கோஷ்டிகள், விஷேனு திருவீதி புறப்பாடு நடைபெற்றன. நள்ளிரவு 12:30 மணிக்கு திருவீதி புறப்பாடும், திருவாய்மொழி சேவையும் நடந்தன. இன்று அதிகாலை 4:30 மணிக்கு வீரராகவ பெருமாள், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து திருவள்ளூருக்கு புறப்பட்டு சென்றார்.