உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 79% கோவில்கள் ஆகமம் அல்லாதவை என போலி முத்திரை; கண்கட்டு வித்தையாக நடத்தப்படும் கணக்கெடுப்பு

79% கோவில்கள் ஆகமம் அல்லாதவை என போலி முத்திரை; கண்கட்டு வித்தையாக நடத்தப்படும் கணக்கெடுப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் வகையில், ஹிந்து சமய அறநிலையத்துறை, ஆகம கோவில் கணக்கெடுப்பு என்ற ஆபத்தான கண்கட்டு வித்தையில் இறங்கியிருப்பதாக, ஆன்மிகவாதிகளும், வரலாற்று ஆய்வாளர்களும், குற்றம் சாட்டியுள்ளனர்.


அறநிலையத்துறை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள, ஆகம வகைப்பாட்டு பட்டியலில், ஆய்வு செய்யப்பட்ட 34,971 கோவில்களில், 27,510 அதாவது, 79 சதவீத கோவில்கள், ஆகமம் பின்பற்றப்படாதவை என, முத்திரை குத்தப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, கட்டமைப்பின் அடிப்படையில், தீர்மானிக்க வேண்டிய விவகாரத்தை, தற்போதைய வழிபாட்டு நிலையை வைத்து தீர்மானிப்பது சரியல்ல என, ஆன்மிகவாதிகள் தெரிவித்துள்ளனர். 


இது குறித்து, ஆலயம் காப்போம் அமைப்பின் இயக்குநர் விஜய் நாராயணன் கூறியதாவது: ஆகம நடைமுறை சார்ந்த முடிவுகளை, கோவில் அறங்காவலர்கள் எடுக்க வேண்டும். ஆனால், அறங்காவலர்கள் நியமிக்கப்படாத கோவில்களில், செயல் அலுவலர்களே, தக்காராக கூடுதல் பொறுப்பு வகித்து, தன்னிச்சையாக கையொப்பமிட்டு உள்ளனர். உதாரணத்திற்கு, தஞ்சை மாவட்டம், பரக்கலக்கோட்டையில் அமைந்துள்ள மத்தியபுரிஸ்வரர் கோவிலில் ஆகமம் பின்பற்றப்படவில்லை; 100 ஆண்டுக்கும் குறைந்த பழமையுடையது என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், இக்கோவில், 16-ம் நூற்றாண்டு வரலாற்று தலம். ஆகமப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக, அக்கோவில் குருக்களும் சான்றளித்துள்ளார். இதேபோல, தஞ்சை மற்றும் திருவாரூர் மண்டலங்களில், பல பழமையான சோழர், பாண்டியர் காலத்து ஆகமக் கோவில்களை, 100 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தை சேர்ந்தவை என்றும், ஆகமமற்றவை என்றும் தவறாக வகைப்படுத்தி உள்ளனர். உயர்நீதிமன்றம், ஆகமப்படி கட்டப்பட்ட கோவில்களை கண்டறிய சொன்னதே தவிர, தற்போது வழிபாடு இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லவில்லை. கோவில் செயல் அலுவலர்கள், ஆகம அறிக்கையில் கையொப்பமிட்டது, உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது. 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்களை, ஆகமமற்றது என்று கூறியதும், பல அர்ச்சகர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்பட்டதும் அவலம். எனவே, 79 சதவீத கோவில்களை, ஆகமமற்றவை எனும் முத்திரை குத்தும் அறநிலையத்துறையின் போலி அறிக்கையை, உடனடியாக திரும்ப பெற வேண்டும். இதில் உள்ள குளறுபடிகளை களைந்து, வரலாற்று அறிஞர்கள், ஆகம நிபுணர்கள் மற்றும் அர்ச்சகர்களை வைத்து, நேர்மையான முறையில் மறு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


ஆகமம் என்றால் என்ன?

 

ஆகமம் குறித்து, மயிலாடுதுறை ஸ்ரீ மஹா சதாசிவ பீடாதிபதியும், ஆகம நிபுணருமான ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத சிவாசாரியார் கூறியதாவது: தமிழக கோவில்கள் அனைத்துமே, ஆகம விதிகளின்படியே கட்டமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. ஆகமங்கள் சிவபெருமானால் அருளப்பட்டவை. சைவ சமயத்தில், 28 சிவ ஆகமங்கள், வைணவ தலங்களில் பாஞ்சராத்ர மற்றும் வைகானச ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன. அதேபோல, மாரியம்மன், துர்க்கை உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் கூட, ஆகம முறைப்படி வழிபாடுகள் நடக்கின்றன. கோவில் கட்டுமானம் முதல் மூலவர் விக்ரஹ பிராண பிரதிஷ்டை வரை, அனைத்துமே ஆகம வழி வந்த நுட்பமான நடைமுறைகளாகும். தமிழகத்தின் பழமையான கோவில்கள் அனைத்துமே, ஆகமக் கோவில்கள் என்ற வரிசையில் அடங்கும். சூழலுக்கு ஏற்ப, பிற ஆகம முறைகளும், இங்கு பின்பற்ற அனுமதிக்கப்படுகின்றன. சைவ கோவில்களில், ஆதி சைவர்களும், சிறுதெய்வக் கோவில்களில் பிற பூஜாரிகளும், பூஜை செய்ய ஆகமங்கள் வழிவகை செய்கின்றன. தீர்த்த குளம், கொடிமரம் போன்றவை இல்லாவிட்டாலும், தினமும் ஒருவேளை மட்டுமே பூஜை நடந்தாலோ அல்லது ஆண்டு திருவிழாக்கள் நடக்காமல் போனாலோ கூட, அக்கோவில் ஆகம மரபுக்கு உட்பட்டதாகவே கருதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !