உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை சொக்கநாதரை தரிசனம் செய்தார்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்., 17ல் நடந்தது. இதை முன்னிட்டு கோவிலுக்கு நேற்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதைகளுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.


மக்கள் நலன், நாடு செழிப்புக்காக அர்த்த மண்டபத்தில் அமர்ந்து அம்மனுக்கு பூஜையும், சிறப்பு வழிபாடும் செய்தார். அம்மனுக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள், விலை மதிப்புள்ள பஞ்ச ரத்னங்கள் பதிக்கப்பட்ட, தேவநாகரி எழுத்துக்களில், ‘மீனாட்சி’ என்று பொறிக்கப்பட்ட ஆபரணம் அணிவிக்கப்பட்டிருந்தது. இது ஆதி சங்கராச்சாரியார் அருளிய, இறைவியை போற்றும் ஐந்து ஸ்லோகங்களைக் கொண்ட மீனாட்சி பஞ்சரத்னம் எனும் துதிபாடலைக் குறிப்பதாக அமைந்தது. அதன்பின், கருவறைக்கு வெளியே அமைந்துள்ள இரட்டை விநாயகர் சந்நிதிக்கு அருகில் அரைமணி நேரம் சுவாமி அனுஷ்டானங்களை மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்தனர். தீபாராதனைக்குப் பிறகு அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகளால், கோவில் மரபுப்படியான மரியாதைகள் வழங்கப்பட்டன. பின்னர் யானை பார்வதி, குட்டி யானை துர்காவுக்கு பழங்கள் வழங்கி ஆசீர்வதித்தார். இன்று காலை மீண்டும் கோவிலுக்கு வந்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சொக்கநாதரை தரிசனம் செய்தார். காஞ்சி பீடாதிபதி சுவாமிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை மற்றும் வரவேற்பு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !