கோவில் கருவறையில் சுவாமி சிலை மாயம்
வானுார்: சுவாமி சிலையை கருவறையில் இருந்து வெளியே கொண்டு சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே கோட்டக்கரை பகுதியில் பொறையத்தம்மன் கோவில் உள்ளது. இங்கு கருவறையில், 2 அடி உயரமுள்ள பழமை வாய்ந்த பொறையாத்தம்மன் சிலை இருந்தது.
இந்த கோவிலில் 10 நாட்களுக்கு முன் திருவிழா நடந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5:00 மணி முதல் நேற்று அதிகாலை 4:30 மணிக்குள், கோவில் கருவறையில் இருந்த சிலையை மர்ம நபர்கள் எடுத்துச் சென்று, 2 கி.மீ., தொலைவில் உள்ள இளங்காளியம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்துள்ளனர்.
இது பற்றி தகவலறிந்த கோவில் நாட்டாமை கோட்டக்கரை பள்ளத்தெருவை சேர்ந்த தனுசு,74; பூசாரி ஆலங்குப்பம் இந்திரா நகரை சேர்ந்த ஆனந்த்,39; ஆகியோர் இந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.
பின், இதுகுறித்து, கோவில் நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.