உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி கிருத்திகை; திருத்தணி கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி கிருத்திகை; திருத்தணி கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், பொது வழியில் மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.


திருத்தணி முருகன் கோவிலில், இன்று புரட்டாசி மாத கிருத்திகை விழாவை ஒட்டி, மூலவருக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க வேல் தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பின், காலை 9:00 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகன் மற்றும் வள்ளி – தெய்வானைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு, வள்ளி – தெய்வானையுடன் உற்சவர் முருகன், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, தேர் வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


கிருத்திகை மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அளித்துள்ளதால், வழக்கத்திற்கு மாறாக மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனால், பொது வழியில், பக்தர்கள் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக, திருத்தணி கூடுதல் எஸ்.பி., ஷுபம் திமான் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர். மலைக்கோவிலுக்கு ஆட்டோ, பேருந்து, வேன் ஆகியவை செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால், பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம் சார்பில், 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !