திருத்தணி மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்ல இம்மாதம் 8 நாட்கள் கட்டுப்பாடு விதிப்பு
திருத்தணி: திருத்தணி மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்ல, இம்மாதத்தில் காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை உட்பட, எட்டு நாட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோவிலுக்கு, பிற மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்வர். இந்நிலையில், இன்று காந்தி ஜெயந்தி விடுமுறை, வரும் 4, 11, 18, 25ம் தேதி என, ஞாயிற்றுக்கிழமைகளிலும், 19ம் தேதி ஆயுதபூஜை, 20ம் தேதி விஜயதசமி, 27ம் தேதி கிருத்திகை உள்ளிட்ட எட்டு நாட்களுக்கு, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல, கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இட வசதிக்கேற்ப கார்கள் அனுமதிக்கப்படும். மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து, படாசெட்டிகுளம் வரை, பக்தர்கள் கட்டணமின்றி கோவில் பேருந்தில் பயணம் செய்யலாம். இருசக்கர வாகனங்களில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.