நாடும், மக்களும் குறையின்றி இருக்க ஆகமத்தை போற்றி பாதுகாக்க வேண்டும்: கூனம்பட்டி ஸ்ரீநடராஜ சுவாமிகள் அறிவுரை
திருப்பூர்: ‘‘நாடும், நாட்டு மக்களும் குறையில்லாமல் வாழ ஆகமத்தை போற்றி பாதுகாக்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் ஆகமம் பயின்ற சிவாச்சார்யார்களைக் கொண்டே பூஜைகள், உற்சவங்கள், கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்,’’ என, கூனம்பட்டி திருமடம் ஸ்ரீநடராஜ சுவாமிகள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட பட்டியலில், 34,971 கோவில்களில் 7,461 கோவில்கள் ஆகம விதிகளின்படி அமைந்தவை என்றும், 27,510 கோவில்கள் ஆகமம் பின்பற்றாதவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 79 சதவீத கோவில்கள் ஆகமம் பின்பற்றாதவை என வகைப்படுத்தப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆகம வழிபாட்டு முறைகள் குறித்து, கூனம்பட்டி திருமடம் ஸ்ரீநடராஜ சுவாமிகள் கூறியதாவது: சிவனின் முகத்தில் இருந்து தோன்றியதால் ஆகமங்களுக்கு சிவாகமம் என்று பெயர் பெற்றன. 28 வகையான ஆகமங்கள் உள்ளன. வைணவர்களுக்கு இரண்டு ஆகமங்கள் உள்ளன. மனிதர் இப்படித்தான் வாழ வேண்டும் என்று இறைவன் வழிகாட்டியதுபோல், ஆகமங்களையும் அருளியிருக்கிறார்.
கோவில் கும்பாபிஷேகம், வழிபாடு, இயற்கை பேரிடருக்குப் பிறகு கோவில் சேதமானால் செய்ய வேண்டிய பிராயச்சித்தங்கள் ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.அவற்றை முறையாக அனுஷ்டித்து வாழ்ந்தால் எந்தவொரு பிரச்னையும் இருக்காது. திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர், ‘ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாள் வாழ்க’ என்று பாடியுள்ளார். நாயன்மார்களும் ஆகமத்தை போற்றி எழுதியுள்ளனர். ‘வேதமோடு ஆகமம் மெய்யாம்’ என்று சேக்கிழாரும் பாடியுள்ளார். நாடும், நாட்டு மக்களும் குறைவில்லாமல் வாழ ஆகமத்தை போற்றி பாதுகாக்க வேண்டும். ஆகமம்தான் இறைவன்; இறைவனேதான் ஆகமம். ஆகமம் சார்ந்த கோவில், ஆகமம் சாராத கோவில் என்று கூறுவது முரண்பாடானது. ஆகமம் அல்லாத கோவில் என்றால், அதற்கு ஆகமப்படிதான் கும்பாபிஷேகம் நடத்துகின்றனர். ஆகமத்தை புறக்கணிப்பதால் துன்பத்தை அனுபவிக்க நேரிடும்.
அனைத்து கோவில்களிலும் பூஜைகள், உற்சவங்கள், கும்பாபிஷேகம் ஆகியவை ஆகமம் பயின்ற சிவாச்சார்யார்களைக் கொண்டே நடைபெற வேண்டும். இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.