மகாளய அமாவாசை: திருச்செந்தூர் கடற்கரையில் தர்ப்பணம் செய்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை முன்னிட்டு ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஆடி, தை மாத அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் முழு ஆசியும் கிடைக்கும் என கருதப்படுகிறது. இந்த நாட்களில் தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள் புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமானோர் குவிந்தனர். தங்கள் முன்னோர்களுக்கு எள் பிண்டம் தண்ணீர் விட்டு தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.