சென்னை ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க டில்லியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு இன்று (அக் 11) பிரதமர் மோடி வந்தார். அவரை முதல்வர் விஜய் நேரில் வரவேற்றார். சென்னை விமான நிலையம் அருகே பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இரு புறமும் திரண்டிருந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடிக்கு ஆடல், பாடல் கலைநிகழ்சியுடன் பாஜவினர் வரவேற்பு அளித்தனர். பிறகு, சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பணிகள் முடிக்கப்பட்ட பூந்தமல்லி - வடபழனி இடையே, 15 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்து, அதில் பிரதமர் மோடி பயணம் செய்கிறார். அவருடன் முதல்வர் விஜயும் பயணம் செய்தார்.
சாமி தரிசனம்: சென்னை ஐஐடியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரதமர் மோடி தாமரை பூ வைத்து வழிபாடு நடத்தினார். அவருடன் முதல்வர் விஜய், கவர்னர் அர்லேக்கர் சாமி தரிசனம் செய்தனர். ஜலகண்டேஸ்வரர் கோவிலின் சிறப்பம்சங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கமாக தெரிவித்தார். பின்னர், மாலையில், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்துக்கு செல்கிறார். அங்கு நடக்கும் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் 50-வது ஆண்டு பொன் விழாவில் பங்கேற்கிறார்.