திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவ விழா: பங்காரு திருச்சி உற்சவம் கோலாகலம்
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக நேற்று மாலை அங்குரார்பணம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை பங்காரு திருச்சி உற்சவத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவம் துவங்கியது. பங்காரு திருச்சி உற்சவம் என்பது திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் முதல் நாள் காலையில் நடத்தப்படும் மிகவும் புகழ்பெற்ற தங்கப் பல்லக்கு வாகன சேவையாகும். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீ மலையப்பசுவாமி பட்டு வஸ்திரங்கள், மலர்கள் மற்றும் வைர ஆபரணங்களால் விசேஷமாக அலங்கரிக்கப்பட்டு தங்கப் பல்லக்கில் எழுந்தருளி உலா வந்து அருள்பாலித்தார். இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று இரவு 7:00 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி உலா வந்து அருள்பாலிக்க உள்ளார்.