மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் குளத்தை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் குளத்தை துார்வாரி சீரமை க்க வே ண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மாமல்லபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்தலசயன பெருமாள் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளிட்ட சுவாமியர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலின் திருக்குளமான புண்டரீக புஷ்கரணி, கடற்கரை கோவில் சாலையில் உள்ளது.மாசிமக தீர்த்தவாரி உத்சவ நாளில், ஸ்தலசயன பெருமாள் தேவியருடன் தெப்போத்சவம் காண்பார். விழா நாட்களில் மட்டும் பெயரளவிற்கு கோவில் குளம் துார்வாரி சீரமைப்படுகிறது. மற்ற நாட்களில் பராமரிப்பின்றி கிடப்பதால், செடி கொடிகள் வளர்ந்து கோவில் குளம் துார்ந்துள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். அத்துடன் குளத்தை சுற்றி பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகள் சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, பருவமழை தொடங்கும் முன், கோவில் குளத்தை துார்வாரி சீரமைக்க கோவில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.