பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் நவராத்திரி உற்சவம் கோலாகலம்; மவுத் ஆர்கன் வாசித்து நடனமாடிய கோவில் யானை
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று துவங்கியது. முதல் திருநாளில் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு சேவை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, உற்சவர் ஸ்ரீரங்கநாச்சியார் தினமும் மாலை புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவில் இன்று ரெங்கநாயகி தாயார் திருஆபரணங்கள் அணிந்து சிறப்பபு அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வருடத்தின் ஒரே நாள் மட்டும் தரிசனம் தரும் மஹாலக்ஷ்மி தாயார் திருவடி சேவை நவராத்திரி 7ம் திருநாளில் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. நவராத்திரி கொலு மண்டபத்தின் முன்பாக, ஸ்ரீரங்கம் கோயில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி தங்களின் துதிக்கையால் மவுத் ஆர்கன் இசைத்தும், கால்களை அசைத்து நடனமாடியும் தாயாரை வணங்கியது பக்தர்களை கவர்ந்தது.