பழையசீவரம் கெங்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்
ADDED :14 minutes ago
பழையசீவரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் பழையசீவரத்தில், கிராமத்திற்குச் சொந்தமான கெங்கையம்மன் கோவில் உள்ளது. இப்பகுதி மக்கள் கெங்கையம்மனை கிராம தேவதையாக வழிபட்டு வரும் இக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று மாலை அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், தினமும் ஒவ்வொரு அவதாரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். வரும் 20ம் தேதி இரவு மகா தீபாராதனை மற்றும் திருவீதி உலா நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.