கடலாடியில் களைகட்டும் தசரா விழா
கடலாடி: நவராத்திரி உற்ஸவ விழாவை முன்னிட்டு தசரா விழா கடலாடியில் களைகட்டத் துவங்கி உள்ளது.
துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழாவை முன்னிட்டு கடலாடியில் நேர்த்திக்கடன் பக்தர்கள் காப்பு கட்டி தெய்வங்களின் வேடமணிந்து பூஜை செய்கின்றனர். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா அக்.,11ல் காப்பு கட்டி கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் நேர்த்திக்கடன் பக்தர்கள் விரதத்தை முறையாக கடைப்பிடித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி உற்ஸவம் மற்றும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் பக்தர்கள் கடலாடியில் தசரா குழுக்களாக சுவாமி தரிசனத்திற்கு விரதம் இருந்து வருகின்றனர். கடந்த 48 நாட்களுக்கு முன்பு விரதம் துவக்கிய பக்தர்கள் குலசேகரப்பட்டினம் சென்று கடலில் நீராடி கரகக்கூடம் எடுத்து வந்து காப்பு கட்டி விரதம் துவக்கினர்.
தென்னை ஓலை கொட்டகையில் கூடாரம் அமைத்து அவற்றினுள் உற்ஸவர்கள் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் படங்களை வைத்தும் சிலை வடிவம் செய்தும் பூஜை செய்கின்றனர். தினந்தோறும் இரவில் சக்தி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளை செய்து அன்னதானம் வழங்குகின்றனர். காளியம்மன், பத்ரகாளி, மயான காளி, போலீஸ், டாக்டர், நரிக்குறவர், பெண், முருகன், விநாயகர் உள்ளிட்ட வேடம் அணிந்து மேளதாளங்கள் முழங்க நகரில் உலா வந்து காணிக்கை பெற்று பூஜை செய்கின்றனர்.