தப்பியது கோவில்! அதிகாரிகள் முடிவால் பக்தர்கள் நிம்மதி
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரம் தண்டு மாரியம்மன் கோவிலை இடிக்காமல், சர்வீஸ் சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனால் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் இருந்து ஜோதிபுரம் தண்டு மாரியம்மன் கோவில் வரை, 1.9 கி.மீ., தூரத்திற்கு, 115 கோடி ரூபாய் செலவில், உயர்மட்ட மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதில், ஜோதிபுரத்தில் வாகனங்கள் இறங்கும் பாதையில், ஜீரோ பாயிண்ட் அருகே மிகக்குறுகிய அளவிலான சாலை வளைவாக அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டன. இதை தடுக்க ஜோதிபுரம் இறங்கு பாலத்தில் சிறிய அளவிலான தடுப்புகள் வைக்கப்பட்டு, விபத்துகளை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனால் பாலத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த சாலையை விரிவுபடுத்த, பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் பலமுறை கோரிக்கை விடுத்தும், விரிவாக்க பணிகள் நெடுநாட்கள் கிடப்பில் போடப்பட்டு இருந்தன.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் அலுவலகத்திற்கு புகார் மனுக்கள் சென்றன. இதையடுத்து, மத்திய அரசு சார்பில் ஆய்வு செய்த அதிகாரிகள், சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி இணைப்புச் சாலைகள், வடிகால்கள் மேம்பாலத்தின் இருபுறமும், தெருவிளக்குகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தனர்.
ஜோதிபுரம் அருகே ஜீரோ பாயிண்ட் இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வீடுகள் உரிய நஷ்ட ஈடு தொகை வழங்கி அகற்றப்பட்டன. அதே பாதையில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில்களை அகற்ற கோவில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தேசிய நெடுஞ்சாலை துறையினரின் இடைவிடாத வற்புறுத்தலை அடுத்து, ஆக., மாதம் தண்டு மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள விநாயகர் சிலையை அகற்றி, அரச மரத்திற்கு பின்புறம் நிறுவ பக்தர்கள் ஒப்புக் கொண்டனர்.
தற்போது தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், தண்டு மாரியம்மன் கோவிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், வடிகால் அமைத்து, ஜீரோ பாயிண்ட்டில் இருந்து இணைப்புச் சாலைகளை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால் இணைப்பு சாலைகள் அமைக்கும் பணி விறு,விறுப்பாக நடந்து வருகிறது.
இது குறித்து, ஜோதிபுரம் தண்டு மாரியம்மன் கோயில் ஆராதனை மற்றும் வழிபாட்டு அறக்கட்டளை நிர்வாகி ரங்கராஜ் கூறுகையில், எங்களுடைய கோரிக்கையினை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கேட்டறிந்தனர். தண்டு மாரியம்மன் கோவில் அருகே வடிகால் விரைவில் அமைத்து பணிகள் முடிக்கப்படும். தண்டு மாரியம்மன் கோவிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், இணைப்பு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்துள்ளனர். முன்பு விநாயகர் சிலை இருந்த அரச மரத்துக்கும், எவ்வித பாதிப்பும் இல்லாமல் திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனவும், அறிவித்துள்ளனர். இதனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக நீடித்து வந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு எட்டப்பட்டுள்ளது என்றார்.
இதனால் தண்டு மாரியம்மன் கோவில் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.