திருமலை ஏழுமலையான் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற தீபாவளி ஆஸ்தானம்!
திருமலை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை பாரம்பரிய முறைப்படி தீபாவளி ஆஸ்தானம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன், விஷ்வக்சேனர் ஆகிய உற்சவ மூர்த்திகள் தங்கவாசல் அருகே கருடாழ்வார் சன்னிதியில் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகள், கற்பூர ஆரத்தி மற்றும் பிரசாதம் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
இதில் பங்கேற்ற தேவஸ்தான தலைவர் முத்தடா ரவிச்சந்திரா, பக்தர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். அனைவரும் குடும்பத்தினருடன் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், செல்வ வளத்துடன் மகிழ்ச்சியாக வாழ பெருமாளின் அருள் கிடைக்கட்டும் என வாழ்த்தினார். ஆகம விதிகளின்படி வேத மந்திரங்கள் முழங்க இந்த ஆஸ்தானம் நடத்தப்பட்டதாக தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் வெங்கையா சவுத்ரி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயர், சின்ன ஜீயர், கோயில் அர்ச்சகர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்துகொண்டனர்.