உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெருசலேம் பயணத்திற்கு வாய்ப்பு நீட்டிப்பு!

ஜெருசலேம் பயணத்திற்கு வாய்ப்பு நீட்டிப்பு!

சென்னை: ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள், விண்ணப்பிக்கலாம் என, அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசின் நிதியுதவி திட்டத்தில், ஜெருசலேம் புனிதப் பயணம் சென்று வர, தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கு, ஒருவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதற்கான பயண ஏஜென்ட்கள், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தால், தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயண விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.பயண நிரல்படி, எகிப்து, இஸ்ரேல், ஜோர்டன் நாடுகளை உள்ளடக்கிய, 10 நாட்கள், புனித பயணத்திற்கு, 73 ஆயிரம் ரூபாயும்; இஸ்ரேல், ஜோர்டன் நாடுகளை உள்ளடக்கிய, எட்டு நாள் பயணத்திற்கு, 66 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதில், அரசு நிதியுதவியான, 20 ஆயிரம் ரூபாயை, தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம், பயண ஏஜென்ட்களுக்கு செலுத்தி விடும். மீதமுள்ள தொகையை, பயனாளிகள் செலுத்தினால் போதும்.அரசின் திட்ட்டத்தில், புனிதப் பயணம் மேற்கொள்ள விருப்பமிருந்து, இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு, வாய்ப்பு அளிக்கும் விதமாக, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால், மேலும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். விருப்பமுள்ளவர்கள் தாமதமின்றி, அதற்கான விண்ணப்பத்தை, உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலும், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக அலுவலகத்திலும், விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப உறையில், ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம் என, குறிப்பிட்டு, அண்ணாசாலையில் உள்ள சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !