உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானக்குறள் (தன்பால்)

ஞானக்குறள் (தன்பால்)

ஞானக்குறள்  27. ஞான நிலை

தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந்
துற்பன மஞ்சை யுரை.  261

தற்புருட மாமுகமேற் றாரகை தன்மேலே
நிற்பது பேரொளி நில்.  262

ஓதிய தற்புரு டத்தடி யொவ்வவே
பேதியா தோது பிணை.  263

கொழுந்துறு வன்னி கொழுவுற வொவ்வில்
எழுந்தா ரகையா மிது.  264

மறித்துக் கொளுவிடு வன்னி நடுவே
குறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு.  265

காலுந் தலையு மறிந்து கலந்திடில்
சாலவும் நல்லது தான்.  266

பொன்னொடு வெள்ளியி ரண்டும் பொருந்திடில்
அன்னவன் றாளதுவே யாம்.  267

நின்ற வெழுத்துட னில்லா வெழுத்தினை
யொன்றுவிக் கிலொன் றேயுள.  268

பேசா வெழுத்துடன் பேசுமெழுத்துறில்
ஆசான் பரநந்தி யாம்.  
269

அழியா வுயிரை யவனுடன் வைக்கில்
பழியான தொன்றில்லை பார்.  270

ஞானக்குறள்  28. ஞானம் பிரியாமை

பிறந்திட மாலிடம் பேரா திருப்பின்
இறந்திடம் வன்னி யிடம்.  271

சாகா திருந்த தலமே மவுனமது
ஏகாந்த மாக விரு.  272

வெளியில் விளைந்த விளைவின் கனிதான்
ஒளியி லொளியா யுறும்.  273

மறவா நினையா மவுனத் திருக்கில்
பிறவா ரிறவார் பினை.  274

குருவாம் பரநந்தி கூடல் குறித்தாங்
கிருபோது நீங்கா திரு.  275

சுந்திரச் சோதி துலங்கு மிடமது
மந்திரச் சக்கரமு மாம்.  276

தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது
பாராப் பராபரம் பார்.  277

ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன்
நீரொளி மீது நிலை.  278

அந்தமு மாதியு மில்லா வரும்பொருள்
சுந்தர ஞானச் சுடர்.  279

இதுமுத்தி சாதனமென் றேட்டில் வரைந்து
பதிவைத் தனன்குரு பார்.  280

ஞானக்குறள்  29. மெய்நெறி

செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையுஞ்
சொல்லு மவுனத் தொழில்.  281

பஞ்சிற் படுபொறி போலப் பரந்திருந்து
துஞ்சாது ஞானச் சுடர்.  282

இமைப்பிற் பரந்தங் கொடுங்கு மின்போல்
நமக்குட் சிவன்செயல் நாடு.  283

குவித்து மனத்தைக் குவித்துள்ளே யோங்கில்
செவித்துப் பெறுவ தெவன்.  284

காலுந் தலையு மொன்றாகக் கலந்திடம்
நாலா நிலையென நாடு.  285

மூல நிலமிசை மூன்றா நிலத்தினில்
ஆல மருந்துஞ் சிவம்.  286

எழுஞ்சுட ருச்சியின் மேன்மனம் வைக்கத்
தொழிலொன் றிலாத சுடர்.  287

அடைத்திட்ட வாசலின் மேன்மனம் வைத்துப்
படைத்தவன் தன்னையே பார்.  288

அறுபதொ டாறு வருட மிதனை
உறுதிய தாக யுணர்.  289

அட்டமா சித்தி யடையுமோ ராண்டினில்
இட்ட மிதனைத் தெளி.  290

ஞானக்குறள்  30. துரிய தரிசனம்

வன்னிய தெட்டு மதியம் பதினாறு
முன்னிய பன்னிரண்டு முள.  291

சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம்
பாருமி னீது பயன்.  292

மதியொடு வன்னியொன் றாகவே வந்தால்
கதிரவ னாமென்று காண்.  293

மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில்
உதிக்குமாம் பூரணைச் சொல்.  294

தோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில்
சாற்று மமாவாசை தான்.  295

வன்னி கதிரவன் கூடிடி லத்தகை
பின்னிவை யாகு மெலாம்.  296

அமாவாசை பூரணை யாகு மவர்க்குச்
சமனா முயிருடம்பு தான்.  297

அண்டத் திலுமிந்த வாறென் றறிந்திடு
பிண்டத் திலுமதுவே பேசு.  
298

ஏறு மதிய மிறங்கிடி லுறங்கிடும்
கூறுமப் பூரணை கொள்.  299

உதிக்கு மதியமுங் கண்டங் குறங்கில்
மதிக்கு மமாவாசை யாம்.  300

ஞானக்குறள்  31. உயர்ஞான தரிசனம்

கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப்
பிண்டமு மூழி பிரியா.  301

வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத்
தள்ளுமின் கால சரம்.  302

செவ்வாய் சனிநா யிறுவல மாகவே
கொள்ளிலிவ் வாறிடரு மில்.  303

வளர்பொன் னிடம்பிறைத் தேய்வு வலமாம்
வளர்பிறை யென்றே மதி.  304

வலத்திற் சனிக்கே யிராப்பகல் வாயு
செலுத்துபே ராது செயல்.  305

இயங்கும் பகல்வலமி ராவிடம் வாயு
தயங்குறல் நாடிக்குட் டான்.  306

அரசறி யாம லவன்பே ருறைந்துத்
தரைதனை யாண்ட சமன்.  307

கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச்
செல்லாத தென்ன செயல். 308

திருவருட் பாலைத் தெரிந்து தெளியில்
குருவிருப் பாமென்று கொள்.  309

கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற
நிற்கில் பரமவை வீடு. 310


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !