தமிழ் புத்தாண்டு கோவில்களில் குவிந்தது மக்கள் வெள்ளம்!
சென்னை: சென்னையில் நேற்று தமிழ் புத்தாண்டான சித்திரை பிறப்பு கோலாகலமாக வீடுகளிலும், கோவில்களிலும் கொண்டாடப்பட்டது. கோவில்களில் தரிசனம் முடித்து விட்டு, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, "கைநீட்டம் எனப்படும் காசு கொடுத்து வாழ்த்து கூறினர்.
கோவில்களில் கூட்டம்: தமிழ் புத்தாண்டான நேற்று சென்னையில் வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், மயிலாப்பூர் கடும்பாடி அம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தன. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், மயிலாப்பூர் கடும்பாடி அம்மன் கோவில்களில், நேற்று 108 பால்குட அபிஷேகம் நடந்தது. பெரும்பாலான கோவில்களில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் வெள்ளம் அலைமோதியது. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில், ராகவேந்திரா கோவில் மற்றும் குருவாயூரப்பர் கோவில்களில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் பெற்றோருடன் கோவிலுக்கு வந்துஇருந்தனர்.
கைநீட்டம்: வீடுகளில், வேப்பம்பூ பச்சடி, அவல் போன்ற விசேஷ உணவு வகைகள் தயார் செய்யப்பட்டன. கோவில்களில் தரிசனம் முடித்து வந்ததும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு "கைநீட்டம் எனப்படும், காசு கொடுத்து வாழ்த்துதல் பெரும்பாலான குடும்பங்களில் இடம் பெற்றது. நேற்று மேலும், தரிசனம் முடித்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, கைநீட்டம் காசு கொடுத்து, மாறி மாறி வாழ்த்து கூறினர்.