ஓடுவதை நிறுத்த என்ன வழி?
மனசு என்பது என்ன? எண்ணங்களை உற்பத்தி செய்யும் கருவி. எண்ணம் நின்று போனால் மனசும் இல்லாமல் போய்விடும். ஆனால், எண்ணத்தை தான் நிறுத்தவே முடியவில்லை. அது சதா நாலுகால் பாய்ச்சலில் எங்கேயாவது பிய்த்துக் கொண்டு ஓடுவதாகவே இருக்கிறது. எத்தனையோ அனுபவங்களை நாம் கண்டுகொண்டே இருக்கிறோம். நமக்குத் தெரிந்து இந்த ஜன்மாவில்; தெரியாமல் எத்தனையோ அனுபவங்கள் பூர்வ ஜன்மாக்களில்! ஒவ்வொன்றின் சுவடும் எண்ணத்தின் வேராக மனசுக்குள் நன்றாக ஓடி, ஏதாவது சிந்தனையை முளைக்கப் பண்ணிக் கொண்டேயிருக்கிறது. பெருங்காயம் இருந்த பாத்திரம் காலியான பின்னும் நெடி விடாமல் இருக்கிற மாதிரி, பலவிதமான அனுபவம் ஏற்பட்ட பின்னும் மனதில் அதன் நெடி மறையாமல் இருக்கிறது. அதைத் தான் வாசனை, ஜன்மாந்த்ர வாசனை, ஸம்ஸ்கார வாசனை என்றெல்லாம் சொல்கிறோம். இந்த நெடி அடங்கினால் மனசு நின்று போகும். ஓடுகின்ற ஒன்று நிற்குமானால் அது தானே ஓட்டத்திற்கு முடிவு. ஜலபிரவாகம் ஓடிக்கொண்டே இருக்கின்ற ஒன்று. அணை போட்டு ஜலத்தை நிறுத்துகிறோம் என்றால் அப்போது ஓட்டம் நின்றுவிடுகிறது அல்லவா? அப்படி சதா ஓடிக் கொண்டிருக்கும் மனதை பக்தியில் நிறுத்தப் பழக்க வேண்டும். -விளக்குகிறார் காஞ்சிபெரியவர்