கோட்டை பெருமாள் கோவிலில் மழை வேண்டி வருண ஹோமம்
ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், மழை பெய்ய வேண்டி, வருண ஹோமம் நடந்தது. ஆத்தூர் பகுதியில், பருவ மழை பெய்யாததால் நீர் நிலைகள் வறண்டது. தற்போது, விவசாய கிணறுகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால், பயிர் சாகுபடியும் பாதித்துள்ளது. மழை வேண்டி, வசிஷ்ட நதிக் கரையில் உள்ள ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், கூகையூர் ஸ்வர்ணபுரீஸ்வரர் ஆகிய பஞ்ச பூத ஸ்தலங்கள் மற்றும், 21 சிவாலயங்களில், கூட்டு பிரார்த்தனை, வழிபாடுகள் நடந்து வருகிறது. ஆத்தூர், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், கடந்த, 5ம் தேதி, வருண ஜெபம் துவங்கியது. 6ம் தேதி மகா தீபாராதனை, வருண வழிபாடு நடந்தது. நேற்று வருண ஹோமம் நடந்தது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில், பிரசன்ன வெங்கடேச பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.