பூண்டி மாதா பேராலய பெருவிழா மே 14ல் அலங்கார தேர்பவனி
தஞ்சாவூர்: தஞ்சை அருகேயுள்ள பூண்டி மாதா பேராலய பெருவிழாவில் வரும் 14ம் தேதி அலங்கார தேர்பவனி விமர்சையாக நடக்கிறது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, பிரார்த்தனை செய்கின்றனர்.தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு பெருவிழா மே ஆறாம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்தப்படுவது வழக்கம். இதன்படி நடப்பாண்டு பெருவிழா கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.முன்னதாக, பூண்டி மாதா சொரூபம் சிறிய சப்பரத்தில் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இறைபாடல்களை கிறிஸ்தவர்கள் பாடி, சப்பரத்தை சுமந்தபடி வந்தனர். தொடர்ந்து, மாதா திருவுருவம் வரையப்பட்ட வண்ண கொடியுடன் கிறிஸ்தவர்கள் பவனி சென்றனர்.கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் ஃபிரான்சிஸ் அந்தோணிசாமி தலைமையில் மிக்கேல்பட்டி மறை வட்ட முதன்மை குரு ஜான் பன்னீர்செல்வம், பூண்டி மாதா பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை செபாஸ்டின், துணை அதிபர் அருள்சாமி, ஆன்மிக தந்தைகள் சூசை மாணிக்கம், மரியதாஸ், உதவித்தந்தைகள் பாஸ்டின் பிரிட்டோ, சின்னப்பன் ஆகியோர் ஊர்வலமாக பேராலயத்தின் முன்புறமுள்ள கொடிமரத்தை அடைந்தனர்.
சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் கொடியை புனிதப்படுத்தி, கொடி மரத்தில் ஏற்றி, ஆண்டு பெருவிழாவை துவக்கி வைத்தார். அப்போது, அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்கள், "மாதாவே வாழ்க, "பூண்டி அன்னையே வாழ்க என கோஷமிட்டனர்.பின்னர், மாதா அரங்கத்தில் நடந்த திருப்பலியில், மரியா நம்பிக்கையின் முன் மாதிரி என்னும் தலைப்பில், அருளாளி வழங்கப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு, பூண்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து வரும் 13ம் தேதி வரை நவநாள் திருப்பலியை பங்கு தந்தையர்கள் நிறைவேற்றி வைக்கின்றனர். 14ம் தேதியன்று, பூண்டி மாதா பேராலய முன்னாள் பங்கு தந்தையர்கள் லூர்து சேவியர் மற்றும் ராயப்பர் ஆகியோர் நினைவு திருப்பலி நிறைபேற்றப்படுகிறது.மாலை ஆறு மணிக்கு சிறப்பு திருப்பலி, மரியா அன்பின் இலக்கணம் என்னும் தலைப்பில் ஆசி வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு வாண வேடிக்கையுடன் மாதாவின் அலங்கார தேர்பவனி நடக்கிறது. வரும் 15ம் தேதியன்று, காலை ஆறு மணிக்கு திருவிழா திருப்பலி, இறுதி நிகழ்ச்சியாக நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை பேராலய அதிபர் தலைமையில் பங்குத்தந்தையர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.