திண்டல் முருகன் கிரிவலப்பாதை ஃபேவர் பிளாக் கற்கள் பதிப்பு
ஈரோடு: ஈரோடு திண்டல் முருகன் கோவில் கிரிவலப்பாதையில், "ஃபேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. ஈரோட்டுக்கு மிக அருகில் உள்ள "மலை முருகன் கோவில் என்பதால், திண்டல் முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். முருகனுக்கு விஷேச நாட்களான வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், சஷ்டி உள்ளிட்ட நாட்களில், ஈரோடு மட்டுமின்றி, பிற மாவட்ட பக்தர்களும் திண்டல் முருகன் கோவிலில் குவிவது வழக்கம். திண்டல் முருகன் கோவில் கிரிவலப்பாதை, கற்களும், மண்ணும் நிறைந்து இருந்ததால், கிரிவலப்பாதை செல்லும் மக்கள் அவதியில் இருந்தனர். எனவே, கிரிவலப்பாதையில் "ஃபேவர் பிளாக் கற்கள் பதிக்கவும், கோவிலை சுற்றி உள்ள தடுப்புச்சுவரை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சில மாதத்துக்கு முன், திண்டல் முருகன் கோவில் மராமத்து பணிகள் துவக்கப்பட்டு, தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இதுகுறித்து தனியார் கான்டிராக்ட் நிறுவனத்தினர் கூறியதாவது: சில மாதத்துக்கு முன் கோவில் தடுப்புச்சுவர் உயர்த்துதல், கிரிவலப்பாதையில் கற்கள் பதித்தல் உள்பட கோவில் மராமத்து பணிகள், 1.15 லட்ச ரூபாய் மதிப்பில் துவங்கியது.
கோவிலின் முன்புறம் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் அனைத்தும் முற்றிலும் நிறைவடைந்தது. பின் பகுதியில், சுற்றுச்சுவர் எழுப்பாமல், கம்பி வேலிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. "ஃபேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடப்பதால், கிரிவலப்பாதையில் கற்கள் பதிக்கும் பணி, வார இறுதியில் முடிவடையும், என்றனர்.