மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் இனி பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரை!
மீண்டும் ஒரு முறை இயற்கை தன் சக்தியை வெளிப்படுத்தி இருக்கிறது அல்லது இயற்கையை மீறுபவர்களை கடுமையாக எச்சரித்திருக்கிறது. இந்த முறை இயற்கை தனது கோரத்தாண்டவத்தை நிகழ்த்திய இடம் உத்தரகாண்ட் மாநிலமாகும். நிலமை சீராக குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகளாகும் என்பதால் மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் இனி பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாநில முதல்வர் சொல்லிவிட்டார். இன்னமும் பல ஆயிரம் பேரின் நிலமை தெரியாததால் மாநில அரசு மிகவும் கவலை கொண்டுள்ளது. தற்போது டேராடூனில் இருந்து இயக்கப்படும் ஹெலிகாப்டர்கள் மூலமாகத்தான் பாதிக்கப்பட்ட கேதார்நாத், பத்ரிநாத் பகுதிகளில் என்ன நடக்கிறது என்பது தெரியவருகிறது. டில்லி பத்திரிகையாளர்கள் டேராடூன் சென்று அங்குள்ள ராணுவ அதிகாரிகள் துணையோடு பாதிக்கபட்ட பகுதிகளுக்கு செல்லத் துவங்கியுள்ளனர்.
மழை பேய் மழையாகி அது பனி உருகி ஒடிவரும் இமயமலை ஆறுகளில் பெருவெள்ளமானதில் அதிகாரபூர்வமாக இதுவரை 500க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், பல ஆயிரக்கணக்கானோரை காணவில்லை, ஐநூறு ரோடுகள், 171 பாலங்கள், முன்னூறு வீடுகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. பக்தி பண்ணிய இடங்கள் தற்போது பணம் பண்ணும் இடங்களாகிவிட்டதால் பத்ரிநாத், கேதார்நாத் போன்ற அமைதியான ஆற்றோர இடங்களில் அத்துமீறியும், வரைமுறையும் இல்லாமல் கட்டப்பட்ட ஓட்டல்கள், தங்கும்விடுதி போன்றவைகள்தான் வெள்ளத்தில் அதிகம் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.