வரலட்சுமி நோன்பு: அம்மன் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள்
கோவை:வரலட்சுமி நோன்பு விழாவையொட்டி நேற்று கோவையிலுள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.வரலட்சுமி நோன்பு விழா மற்றும் ஆடி மாத கடைசி வெள்ளி ஆகியவை அம்மன் கோவில்களில் கொண்டாடப்பட்டது. பெரிய கடைவீதியிலுள்ள கோனியம்மன் கோவிலில் அம்மனுக்கு பட்டு வஸ்திரங்கள், தங்க வைர ஆபரணங்கள் அணிவித்து, மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தண்டுமாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு தங்கக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்தனர். பெரியகடைவீதி மாகாளியம்மன் கோவிலில் கேரட், முள்ளங்கி, வெண்டை, பாகற்காய், சுரைக்காய், காலிபிளவர், முட்டைக்கோஸ், கீரைகளை கொண்டு சுதந்திரக்கொடியை அம்மனுக்கு அலங்காரமாக செய்திருந்தனர்.தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலிலிருந்து பெண் குழந்தைகள் பால்குடம் எடுத்து வைசியாள் வீதியிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். ராமர்கோவில் வீதியிலுள்ள மாகாளியம்மன் கோவிலில் ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகளில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.வைசியாள் வீதி வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோவில், ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில், ஆவாரம்பாளையம் பத்திரகாளியம்மன் கோவில், குறிச்சி பொங்காளியம்மன் கோவில், ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபாடு செய்தனர். இதனால் அம்மன் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.