திருப்போரூர், திருக்கழுக்குன்றம் கோவில் திருப்பணிகள்
திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவில் திருப்பணிகளை மாநில அறநிலையத் துறை ஆணையர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை நேற்று முன்தினம் இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் தனபால், கூடுதல் ஆணையர் ராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர். அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் ஆண், பெண் பக்தர்களுக்கான குளியல் அறை, கழிப்பறை வசதியுடன் கூடிய, முடி காணிக்கை மண்டபத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் ஆணையர் கூறியதாவது: இக்கோவில் திருப்பணிகள் அனைத்தும் திருப்திகரமாக உள்ளது. ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். கோவிலில் உள்ள விநாயகர் சன்னதியில் இரும்பு தடுப்புகளை அகற்றி, எவர்சில்வர் தடுப்புகள் ஏற்படுத்தப்படும், உட்பிரகாரத்தில் உள்ள, ஐம்பொன் உற்சவர் சிலை அமைந்துள்ள இடத்தில், ஒவ்வொரு சுவாமிகளின் பெயரும், எழுத அறிவுறுத்தியுள்ளோம். கிருத்திகை விழா காலங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், வெப்ப பாதிப்பால் கடும் சிரமப்படுவதாகவும், மயக்கம் அடையும் நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். இதை சரிசெய்யும் விதத்தில் கூடுதல் மின்விசிறிகள் பொருத்தப்படும். தாகம் தணிக்க பாட்டில்களில், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், திருப்போரூர், திருவிடந்தையை சார்ந்த துணை கோவில்களாக உள்ள, செங்கண்மாலீஸ்வரர் கோவில், கோவளம் கைலாசநாதர் கோவில், செம்பாக்கம் ஐம்புகேஸ்வரர் கோவில், கொளத்துார், ரங்கநாத பெருமாள் கோவில்களில், அபிஷேக கட்டணமாக, 200 ரூபாய் நிர்ணயிக்கப்படும். புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வைப்பு அறையில், தேவையான பாதுகாப்பு பீரோ வசதிகள் செய்து தரப்படும். கோவில் தென்முகப்பு உட்பிரகாரத்தில், டைல்ஸ் அகற்றப்பட்டு, பழைய கருங்கற்கள் பதிக்கப்படும். முடி காணிக்கை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வில், கோவில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் திருவிடந்தை செயல் அலுவலர் வேதமூர்த்தி உட்பட பலர் உடன் இருந்தனர். திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணிகளை இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால் ஆய்வு செய்தார். திருக்கழுக்குன்றத்தில், பிரசித்திபெற்ற வேதகிரீஸ்வரர் கோவில், 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் நான்கு ராஜ கோபுரங்கள் ரிஷப கோபுரத்துடன் அமைந்துள்ளது. இக்கோவில் பல்லவ, சோழர், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது. பல்வேறு சிறப்புக்களை கொண்ட இக்கோவிலுக்கு, கடந்த 2011ம் ஆண்டு, 2 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக அறநிலையத்துறை ஆணையர் பொது நல நிதியிருந்து 50 லட்ச ரூபாயும், நன்கொடையாளர்கள் மூலம் 1.50 கோடி ரூபாயும் செலவு செய்து திருப்பணிகள் அனைத்தும் முடிந்துள்ளது. இந்நிலையில், செப்டம்பர் மாதம் 15ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்த ஆணையர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, கும்பாபிஷேகம் விழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன் தலைமையில், நடந்தத கூட்டத்தில், அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இதில், விழாவில், அந்தந்த துறைக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக நடத்தவேண்டும் என, ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று, கும்பாபிஷேக பணிகளை, ஆணையர் தனபால் ஆய்வு செய்தார். இணை ஆயைர் ராஜா, கோவில் செயல் அலுவலர் வீருபொம்மு, ஒன்றிய குழுத்தலைவர் புஷ்பா ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.